19.12.2008:மாலைச்செய்திகள்

December 19, 2008 at 1:03 PM Leave a comment

பழைய வீட்டு கடன்களுக்கும் வட்டி குறைப்பு-சிதம்பரம்

டெல்லி: வீட்டுக் கடன்களுக்கான மாறும் வட்டி வீதம் (floating interest rate) விரைவில் குறைக்கப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் முதன் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் சமீபத்தில்தான் 11 சதவிகிதத்திலிருந்து 9.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

ஆனால் ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வங்கிகளும் மௌனம் காத்தன. இந்த நிலையில் நிதித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமரின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்த கேள்விக்கு நேற்று மக்களவையில் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

மாறியுள்ள புதிய வட்டி விகிதங்களின்படி ஏற்கெனவே உள்ள கடன்களுக்கும் வட்டி குறைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகள் தீவிரமாக இறங்கி, மாறும் வட்டி விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும்.

இன்றைக்கு வீட்டு வசதித்துறை மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. இந்தத் துறையுடன் இரும்பு, சிமெண்ட், மின் சாதனங்கள், செங்கல், கோடிக்கணக்கான தொழிலாளர்கள்… என பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே வீட்டு வசதித்துறையில் ஏற்படும் வீழ்ச்சி அனைவரையுமே பாதிக்கும்.

அதிலும் இன்றைக்கு இரும்பு எஃகு தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஏற்றுமதியே இல்லை என்ற நிலை. வீட்டு வசதித் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அது இரும்புத் தொழிலை முழுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான வேலை இழப்புகளுக்குக் காரணமாகிவிடும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியாவில் கடும் நடவடிக்கைகள் விரைவில் அமலாகவுள்ளன. இதைத் தாங்கிக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு மிகக் கடுமையான ஆண்டாகவே இருந்தது. இருப்பினும் விவசாயம், தொழில்துறை, சேவைத் துறையில் எந்தவித தேக்கமும் இல்லாமல் வழக்கம் போல செயல்படும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதை அரசு உறுதி செய்யும். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு நிச்சயம் இது அதிகரிக்கும்.

2007-08ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இறுந்தது. இந்த ஆண்டு ஏழரை முதல் 8 சதவீதமாக அது இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

பொருளாதாரத்தின் உற்பத்திப் பிரிவுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வலியுறுத்தும்.

பிரதமரும், நானும் வங்கித் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளோம். அதிக அளவில் கடன் வழங்குமாறு அப்போது கேட்டுக் கொண்டோம். நவம்பர் இறுதி முதலே கடன் கொடுப்பது அதிகரித்துள்து.

பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அது எடுக்கும் என்றார் ப.சிதம்பரம்.

 

பங்கு சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல்

மும்பை : மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்றும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலேயே இருக்கிறது. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 23.48 புள்ளிகள் ( 0.23 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,099.91 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 16.75 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 3,077.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, கேப்பிடல் குட்ஸ், பவர், மெட்டல், டெலிகாம் பங்குகள் உயர்ந்திருந்தன. ஓ.என்.ஜி.சி., கெய்ர்ன் இந்தியா, சத்யம், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில வங்கி பங்குகள் பெருளவில் விற்கப்படவும் செய்தன. பணவீக்கம் எதிர்பாராத அளவை விட குறைந்திருப்பதை அடுத்து, வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்ததால், ரியல் எஸ்டேட், ஆட்டோ, இன்ஃரா பங்குகள் நல்ல விலைக்கு போயின. பேங்கிங் பங்குகளும் உயர்ந்திருந்தன. இருந்தாலும் றஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் கொஞ்சம் சரிவில்தான் முடிந்திருக்கின்றன. ஆசியாவை பொருத்தவரை கூடியும் குறைந்தும் முடிந்திருக்கிறது.

இந்த வருட இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது ஹூண்டாய் ஐ20 கார்

சென்னை : பொதுவாக கார் விற்பனை குறைந்திருந்த போதிலும் ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ20 மாடல் காரை இந்த வருட இறுதிக்குள் விற்பனைக்கு அனுப்புகிறது. அக்டோபரில் பாரீஸில் நடந்த மோட்டார் ஷோ வில் அறிமுகப் படுத்தப்பட்ட 5 கதவுகளைக் கொண்ட அந்த காரின் விலை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.5.5 லட்சம் வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரூ.5.08 லட்சத்திற்கு கிடைக்கும் சுசுகி ஸ்விப்ட் இசக் எக்ஸ் ஐ மாடலுக்கும், ரூ.5.24 லட்சத்திற்கு கிடைக்கும் ஸ்கோடா ஃபேபியா மாடலுக்கும் ஐ20 ஒரு போட்டியாக இருக்கும் என்கிறார்கள். 1.4 லிட்டர் பெட்ரோல் கப்பா இஞ்சின் பொருத்தப்பட்டு வெளிவரும் இந்த ஐ 20 கார், சென்னையில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, அங்கு ஐ 20 கார் தயாரிப்பு துவங்கி விட்டது என்றும் நவம்பரில் இருந்து வெளிநாடுகளுக்கு அது ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். ஐரோப்பாவில் கெட்ஸ் மாடலுக்கு மாற்றாக இந்த கார் விற்பனை செய்யப்பட்டாலும் இந்தியாவில் வேறு எந்த மாடலுக்கும் மாற்றாக இது இருக்காது என்கிறார்கள். இன்னும் ஐந்து வருடங்களுக்காவது எங்கள் மாடல்கள் மாற்றப்படமாட்டாது என்றார் ஹூண்டாய் இந்தியாவின் அரவிந்த் சேக்ஸேனா.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 36 டாலராக குறைந்தது

நியுயார்க் : வியாழன் அன்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் மேல் குறைந்து, பேரலுக்கு 36 டாலராக குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போய், டீலர்களிடம் ஏராளமான கார்கள் விற்காமல் தேங்கி இருப்பதால், அங்குள்ள கார் கம்பெனிகளுக்கு இன்வென்ட்ரி நஷ்டம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கார்களின் விற்பனை குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் குறைந்து, அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. ஓபக் அமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்போம் என்று சொன்னதும் கூட விலை குறைவதை தடுக்க முடியவில்லை. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 35.98 டாலர் வரை குறைந்து பின்னர் 36.22 டாலரில் முடிந்திருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 43.92 டாலராக இருந்தது. சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் இன்னும் சரியாகவில்லையாதலால், பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்டும் அதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டுதான் இருக்கும் என்று இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.

2,000 தற்காலிக ஊயியர்களை வேலைநீக்கம் செய்ய ஹூண்டாய் இந்தியா முடிவு

புதுடில்லி : கொரிய கார் கம்பெனியான ஹூண்டாய் நிறுவனம், அதன் இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களில் 2,000 பேரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இப்போது அவர்களுக்கு இந்தியாவில் மொத்தம் 8,400 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் சுமார் 3,300 ஊழியர்கள் தற்காலிக ஊழியர்கள். இதில் 2,000 பேரைத்தான் வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜனவரி 2009 முதல் படிப்படியாக இவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார்களுக்கான டிமாண்ட் கூடவில்லை என்றாலும் நாங்கள் அடுத்த வருட துவக்கத்தில் இருந்து சில ஷிப்ட்களையும் குறைத்து விடுவோம் என்று ஹூண்டாய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையின் இரு யூனிட்களிலும் ஆறு ஷிப்ட்கள் இயங்கி வந்தன. இப்போது அது ஐந்து ஷிப்ட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. அது இனிமேல், வரும் ஜனவரியில் இருந்து நான்கு அல்லது மூன்று ஷிப்ட்களாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அவர்களது கார்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. 2009ம் வருடத்தில் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்து விடும் என்று எதிர்பார்ப்பதால் , உற்பத்தியை குறைக்க முடிவெடுத்ததாக சொல்கிறார்கள். இப்போது அந்த நிறுவனம் ஷிப்ட் ஒன்றுக்கு 250 கார்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 1,600 முதல் 1,800 வரை கார்களை தயாரிக்கிறது.

ஐசிஐசிஐ பேங்க்கின் புதிய எம்.டி.,யாக சந்தா கோச்சர் நியமனம்

மும்பை : ஐசிஐசிஐ பேங்க்கின் புதிய எம்.டி., மற்றும் சி.இ.ஓ., வாக , சந்தா கோச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்போது எம்.டி., மற்றும் சி.இ.ஓ.,வாக இருக்கும் கே.பி.காமத் வரும் 2009 ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன்பின் அவர் அந்த வங்கியின் நான் – எக்ஸிகூவிவ் சேர்மனாக இருப்பார் என்றும், புதிய எம்.டி., மற்றும் சி.இ.ஓ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சந்தா கோச்சர் மே ஒன்றாம் தேதியில் இருந்து அந்த பதிவியில் அமர்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 1984 ம் வருடம் பயிற்சி நிர்வாகியாக ஐசிஐசிஐ வங்கியில் சேர்ந்த சந்தா கோச்சர், 1993ம் வருடம் அந்த வங்கி, ஒரு வர்த்தக வங்கியாக மாறினபோது, அதன் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றார். பின்னர் 2001ல் எக்ஸிகூடிவ் டைரக்டராக ஆன சந்தா கோச்சர், 2006ல் டெபுடி மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்வை புது எம்.டி.,யாக தேர்ந்தெடுத்த போர்ட் ஆஃப் டைரக்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், வங்கியின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வங்கியை நடத்தி செல்ல இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவின் பிரபல ஃபார்சூன் இதழில்,ற உலக அளவிலான சிறந்த பெண் நிர்வாகி லிஸ்ட்டில் இவர் பெயர் அடிக்கடி இடம் பெறும்.

டிசம்பர் 21ம் தேதிக்காக தாஜ், டிரைடன்ட் ஹோட்டலில் குவியும் ரிசர்வேஷன் ஆர்டர்கள்

மும்பை : மும்பையில் இருக்கும் தாஜ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில் டிசம்பர் 21ம் தேதிக்கு என்ன மெனு வைக்கலாம் என்று அங்குள்ள சமையல் கலைஞர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாஜ் ஹோட்டல் நிர்வாகமோ, அவர்களுக்கு வர இருக்கும் விருந்தினர்களை அழைத்து வர சொகுசு காரான ஜாகுவாரை கூட தயாராக வைத்திருக்கிறது. இதெல்லாம் எதற்கு என்றால் தீவிரவாத தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இந்த இரு ஹோட்டல்களும், சுமார் ஒரு மாத இடைவேளைக்குப்பின் வரும் 21ம் தேதி தான் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. ஒரு மாதத்திற்குப்பின் ஹோட்டல் செயல்பட ஆரம்பிப்பதால், அன்று வரும் விருந்தினர்களை எப்படியெல்லாம் கவனிக்கலாம் என்று சதா ஆலோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதே அந்த இரு ஹோட்டல்களின் ரெஸ்டாரன்ட்களிலும், இருக்கைகளுக்காக ரிசர்வேஷன் ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டேருப்பதாக சொல்கிறார்கள். டிரைடன்ட் ஹோட்டலின் <உரிமையாளர்களான ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் உயர் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைந்திருக்கும் அதிகப்படியான அன்பை நினைக்கும்போது மெய்சிலிர்த்து போகிறோம். டிசம்பர் 21ம் தேதி எங்கள் ரெஸ்ட்டாரன்ட் மீண்டும் துவங்கும் போது அது நிரம்பி வழியும் என்று தெரிகிறது என்றார்.எங்கள் ஹோட்டலில் ஃபிராங்கிபானி ‘, ‘ இந்தியா ஜோன்ஸ் ‘, ‘ ஓபியம் டென் ‘, ‘ வெராண்டா என்ற நான்கு ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன. இந்த நான்குமே நிரம்பிக்கொண்டிருக்கின்றன. டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் நாங்கள் ரிசர்வேஷன் ஆர்டர்களை இப்போது வாங்கிக்கொள்கிறோம் என்றார் அவர். தாஜ் ஹோட்டலை பொருத்தவரை, அதன் புது கட்டிடமான டவர் பில்லிங்கில் இருக்கும் த ஜோடியாக் கிரில் ‘, ‘ சவுக் ‘, ‘ மசாலா கிராப்ட் ‘, ‘ அக்குவாரிஸ் ‘, ‘ ஷாமியானா ‘, ‘ ஸ்டார் போர்ட் ‘, ‘ லா பேட்டிசரி ஆகிய 7 ரெஸ்ட்டாரன்ட்களும் டிசம்பர் 21ம் தேதி மாலை 7.30 மணியில் இருந்து திறந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாரம்பரியமிக்க தாஜ் ஹோட்டலின் பழைய கட்டிடம் இன்னும் தயாராகாததால், அது திறக்கப்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாத கால இடைவேளைக்குப்பின் வரும் விருந்தினர்களுக்காக இரு ஹோட்டல்களுமே மெனுவில் சில அயிட்டங்களை கூடுதலாகவும் சேர்க்க இருக்கின்றன.

 

 

Entry filed under: வணிகம்.

Trading Holidays for 2009 22.12.08:காலைத்துளிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments


%d bloggers like this: