Archive for December 1, 2008
உலகின் 20 அபாயகர நாடுகளில் இந்தியாவும் சேர்ப்பு
லண்டன்: உலகின் 20 அபாயகர நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் இதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலகின் 20 அபாயகர நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா தவிர பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீனம், மெக்சிகோ, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர செச்னியா, ஜமைக்கா, சூடான், கொலம்பியா, ஹைதி, எரித்ரியா, காங்கோ, லைபீரியா, புருண்டி, நைஜீரியா, ஜிம்பாப்வே, லெபனான் ஆகியவையும் இதில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை மட்டுமே தற்போதைக்கு அபாயகரமானதாக உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகள் மிகவும் பாதுகாப்பானவைதான். அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளும் பாதுகாப்பற்றதாக உள்ளது.
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் பரவலாக உள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்த நாடு முழுவதுமே பாதுகாப்பற்றதாக உள்ளது. தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் மிக பயங்கரமாக உள்ளது.
அங்கு அடிக்கடி நடக்கும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள், மோதல்கள் உள்ளிட்டவற்றால் வெளிநாட்டினருக்கு அச்சுறுத்தலான நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ அதிகாரிகளைக் ‘கைது’ செய்த மும்பை போலீஸ்!
மும்பை: மும்பைக்கு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய விசாரணைக்கு உதவுவதற்காக வந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இருவரை மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக கைது செய்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு உதவ 7 பேர் கொண்ட எப்.பி.ஐ அதிகாரிகள் நேற்று மும்பை வந்தனர்.
அவர்களில் 5 பேர் முன் கூட்டியே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். பின்னால் வந்த இரண்டு பேர் மும்பை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட கருவிகளை வைத்திருந்ததாக தெரிகிறது.
வந்தவர்கள் எப்.பி.ஐ அதிகாரிகள் எனத் தெரியாத பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்து விட்டனர். தங்களுக்குப் பின்னால் வந்த இருவரையும் காணவில்லை என்பதை அறி்நத முன்னால் சென்ற எப்.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே வந்து விசாரித்தபோதுதான் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் தாங்கள் யார் என்பதைச் சொல்லி இருவரையும் மீட்டு வெளியேறினர் எப்.பி.ஐ. குழுவினர்.
எப்.பி.ஐ. குழுவினர் வருவதைக் கூட சரிவரத் தெரிவிக்காமல் விமான நிலைய அதிகாரிகள் செய்த குழப்பத்தால் இந்த சொதப்பல் ஏற்பட்டு விட்டது.
தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தால் காப்பீட்டு தொகை கிடைக்குமா ?
மும்பை : மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை கிடைப்பது அவ்வளது எளிதான விஷயம் அல்ல என்கிறார்கள். தீவிரவாத தாக்குதலில் கொல்லப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ‘ டெரோரிஸம் இன்சூரன்ஸ் கவர் ‘ என்பது இப்போதைக்கு இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக எல்லா லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுமே, இன்சூர் செய்தவர் தற்கொலை தவிர வேறு எந்த வகையில் இறந்தாலும், இன்சூர் செய்த தொகை கொடுக்கப்படும் என்றுதான் சொல்கிறது. எனவே இதையும் தற்கொலை இல்லாத மரணம் என்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் றஅமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்கிறார்கள் கோடக் லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள். ஆனால் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகள், தீவிரவாதத்திற்கான இன்சூரன்ஸ் கவரை, தீ விபத்துடன் சேர்த்து add-on இன்சூரன்ஸ் பாலிசியாக வைத்திருக்கின்றன.
மும்பை பயங்கரம்: மாறட்டும் அணுகுமுறை!
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏ.கே.47 துப்பாக்கிகளுடனும், கையெறி குண்டுகளுடனும் இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். மிரண்டுபோன மும்பை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை கட்டுப்பாடு விதிக்கும் அளவிற்கு நிலைமை அபாயகரமாக உள்ளது.
உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?
இவ்வளவு பெரிய அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டுமெனில் இது நிச்சயம் நீண்ட கால சதித் திட்டமாகவே இருக்க வேண்டும். ஆனால், இது குறித்த உளவு எச்சரிக்கை ஏதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
2006ஆம் ஆண்டு மும்பை புறநகர் இரயில் குண்டுவெடிப்புகள், மாலேகான் குண்டுவெடிப்பு என்று பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அமைப்புகளை கண்டறிந்து தீவிர புலனாய்வில் மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஈடுபட்டுவந்த நேரத்தில் இந்த பயங்கரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
பெங்களூருவில் இருந்து தொடங்கி, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, பிறகு சமீபத்தில் அஸ்ஸாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது எதைக் குறிக்கிறது என்றால், இன்னமும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து (உளவறிந்து) தடுக்கும் திறனை நமது உளவு அமைப்புகள் பெறவில்லை என்பதே.
இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெறும் என்று ஒரு சிறிய எச்சரிக்கை கூட வராத காரணத்தினால், மும்பை காவல் அமைப்பின் திறனையும் தாண்டி, மக்களுக்கும், காவலர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே இது நமது உளவு அமைப்பின் மிகப் பெரிய தோல்வியாகும். அதன் திறன் கிரீடத்தில் பதிந்த மற்றொரு தோல்விச் சிறகாகும்.நமது நாட்டில் இப்படி திட்டமிட்டு நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் பின்னணியிலும் எல்லைக்கு அப்பால் இயங்கும் சக்திகளின் கைகள் உள்ளன என்று நமது அரசாலேயே பலமுறை கூறப்பட்ட பின்னரும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன என்றால் அது நமது அயல் உளவு அமைப்பின் தோல்வியே என்பதிலும் சந்தேகம் இல்லை.
பயங்கரவாதத்தை தடுக்க, ஒடுக்க தனித்த அமைப்புத் தேவை!
பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து, அதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்கவும், சதியில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கைது செய்து, விசாரணையின் வாயிலாக அவர்களின் தொடர்புகளை அறிந்து, தேச அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ அதிகபட்ச நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும், அதற்கு தனித்த உளவு அமைப்பை – தேச அளவில் – ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ.வெப்துனியா.காம் தொடர்ந்து கூறிவந்துள்ளது.
இதனை மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்த ஆணையமும் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கான அவசியமில்லை என்று மத்திய அரசு நிராகரித்தது. மத்திய உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளை மேலும் பலப்படுத்தினாலே போதும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த காவல் துறைத் தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்தை ஒடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனிப் படைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படிப்பட்ட தனிப் பிரிவை கொண்டுள்ள (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) காவல் துறை இயங்குமிடத்தில்தான் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக அல்ல…1992ஆம் ஆண்டு முதல் 2006 மெட்ரோ இரயில் தாக்குதல் வரை பல முறை நடந்துள்ளது.
எனவே பயங்கரவாதத்தை காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு அமைப்பதனால் மட்டுமே தடுக்கவோ, ஒடுக்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, காவல் துறை தலைமை இயக்குனர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல், பயங்கரவாதத்தின் முகங்கள் மாறிக்கொண்டு வருகின்றன என்றும், அவர்கள் அணுகுண்டு, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆபத்து கூட உள்ளது என்று பேசினார். அவர் பேசியதன் பொருள் என்னவென்பது அவருக்குதான் வெளிச்சம். தனது பேச்சிற்கு அவர் எந்த அடிப்படையையும் கூறவில்லை. பயங்கரவாதத்தை பயங்கரமாக சித்தரித்துவிட்டு… ம்… பார்த்துக்கொள்ளுங்கள் என்று முடித்துகொண்டு போய்விட்டார். ஒரு இலக்கை நிர்ணயிக்கும் பேச்சாக அது இல்லை.
2001
ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்குப் பிறகு, மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்காவில் நடத்தப்படவில்லையே ஏன்? காரணம் அந்நாட்டு உள் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. பயங்கரவாதத்தை ஒடுக்கும் ஒற்றை இலக்குடன் கடுமையாக பணியாற்றியது. அதற்கான முழுச் சுதந்திரத்தையும் அந்நாட்டு அரசு எஃப்.பி.ஐ.க்கு தந்தது.மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் அவர்களை சித்தரவதை செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாற்றுகிறது. மற்ற பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்தபோது இக்கட்சி இப்படி எந்தக் குற்றச் சாற்றையும் கூறவிலலை. பயங்கரவாதத்தை அரசியலாக்குவதிலேயே குறியாக உள்ளார்கள். இதில் காங்கிரஸ் கட்சியும் மாறுபட்டதல்ல.
உண்மையில் குற்றம்சாற்றப்பட வேண்டியது நமது உளவு அமைப்புகள் மீதுதான். உளவு அமைப்புகள் சரியாக செயல்படாததே பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்று பலரும் கூறிவிட்டனர். ஒரு பீடாதிபதி கூட உளவுத் துறை மீதுதான் குற்றம் சாற்றினார். அந்த அளவிற்கு இவர்களின் ‘திறன்’ ஊரறிந்த ரகசியமாக உள்ளது.
நமது உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்து, எங்கே தவறு ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டும் அளவிற்கு அவைகள் வெளிப்படையாக இயங்குவதில்லை என்பதும், பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதும் இந்த நாடறிந்த இரகசியம். எனவே அதை ஆராய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
பயங்கரவாத நடவடிக்கைகள் இதற்கு மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டுமெனில் அதனை ஒடுக்குவதை மட்டுமே இலக்காகக் கொண்ட மத்திய புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை ஒரு சட்டத்தை உருவாக்கி (மத்திய புலனாய்வுக் கழகத்தை உருவாக்கியதைப் போல) ஏற்படுத்த வேண்டும். அதன் செயல்பாடு சுதந்திரமாக இருக்கவும், பயங்கரவாதிகள் மற்ற குற்றவாளிகள் பெறக்கூடிய சட்ட நிவாரணங்களை பெற முடியாத ஒரு சட்டத்தையும் (பொடா போன்றது அல்ல) அதற்கு இணையாக நிறைவேற்றி உருவாக்க வேண்டும்.
மத்திய அமைப்பைப் போன்று மாநில அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று ஒரே ஒரு இலக்கை கொண்ட புலனாய்வு-உளவு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அந்த அமைப்பு முழுமையாக பிரிக்கப்பட்ட தனித்த அமைப்பாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தபோது மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் அளித்த யோசனையை நிறைவேற்ற வேண்டும். அது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேச அடையாள அட்டை வழங்குவது. அதுவே அவர்களின் சட்ட கவசமாகவும், பாதுகாப்பு, வாக்குரிமை, கடன் பெறுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படையானதாக இருத்தல் வேண்டும்.
பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துகொண்டு, “மக்கள் பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு, அத்தோடு அவர்களின் பாதுகாப்பை மறந்துவிடாமல், உண்மையாக நடப்பதாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் இதனைச் செய்யட்டும்.
சிட்டி பாங்க்கின் கடிதம்!
சிட்டி வங்கி தனது நிதி நிலவரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதி வருவதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள சிட்டி வங்கியின் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியாக கருதப்படுகிறது. இந்நிலையில் வங்கியின் வராக் கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 சதவீதம் சரிந்தது.
சிட்டி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும், முதலீடு செய்தவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வங்கியின் நிதிநிலைமை குறித்து கவலை வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், வங்கியின் இந்தியப் பிரிவு வர்த்தக மேலாளர் ராஜசேகரன் இ&மெயில் மூலம் கடிதம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
“சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிட்டி வங்கியின் இப்போதைய நிதி நிலை மை குறித்தும் உங்களுடைய நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் எங்களுக்கு உள்ள பொறுப்புகள் குறித்தும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்“ என்று தொடங்கி, விரிவான விளக்கங்களுடன் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
“பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதுவது என்பது வழக்கமான நடைமுறைதான்“ என்று சிட்டி வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லெமன் பிரதர்ஸ் வங்கி திவாலான போது, ஐசிஐசிஐ வங்கியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பீதி நிலவியபோது, அவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற நம்பிக்கை கடிதத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தை : உண்மை உணர்வோமா!?
தற்போதைய தினசரிகளும் மீடியாக்களும் தினம் போடும் கூப்பாடுதான் இவை.
“உண்மையில் நம் நாட்டில் ஒரளவுக்கு மேலேயே தாக்குப்பிடிக்கும் அளவுக்கு பொருளாதாரம் நன்றாகவே இருப்பதாகவும், உலகப்பொருளாதாரத்தை கண்டு முதலீட்டாளர்கள் அடையும் பீதியே நம் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணம்” என்றும் பல பொருளாதார வல்லுனர்கள் கூறியும் நம் மக்கள் எதையும் கண்டுகொள்வதாக இல்லை. விளைவு? மேலும் மேலும் பாதாளத்தை நோக்கி பாய்ந்தது சந்தை.
தாக்குதல் :
வரலாறு காணாத இந்த துயர சம்பவத்தால் ஒரு நாள் (வியாழக்கிழமை – 27.11.2008) நம்நாட்டின் பங்குச்சந்தை வர்த்தகமே நிறுத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டது.
நம்பிக்கை :
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
மேலும் கடந்த நவம்பருடன் ஒப்பிட்டால் இன்றைய விலையில் எல்லா பங்குகளுமே மிகவும் சல்லிசான விலையே! பணமிருப்பவர்கள் தைரியமாக வாங்கிவையுங்கள். ஓராண்டில் இருமடங்காகவும் மாறிடும் வாய்ப்புக்களை எதிர்பார்ப்போம்.
தேவை : 500 கோடி ரூபாய்!
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மும்பை தாஜ் மகால் பேலஸ் ஓட்டலை மீண்டும் புதுப்பிக்க ரூ.500 கோடி தேவைப்படும், புதுப்பிக்கும் வேலை ஒரு வருடமாவது பிடிக்கும் என கட்டுமான துறை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மும்பையில் கடற்கரை ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது தாஜ் மகால் பேலஸ். 1903ம் ஆண்டில் இதை டாடா குழுமத்தின் ஜாம்செட்ஜி டாடா திறந்து வைத்தார். இது இப்போது பாரம்பரிய சின்னமாக மதிக்கப்படுகிறது. இதையட்டி புதிய டவர் வளாகமும் உள்ளது. இவற்றில் மொத்தம் 529 அறைகள் உள்ளன.
இப்போது தீவிரவாதிகளின் தாக்குதலால் ஓட்டல் சின்னாபின்னமாகி உள்ளது. டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அந்த ஓட்டலுக்கு சென்று சேதத்தை பார்வையிட்டார். அவருடன் இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவன துணைத் தலைவர் ஆர்.கே. கிருஷ்ணகுமார் இருந்தார். ‘‘இந்த ஓட்டலை முற்றிலுமாக சீரமைப்போம்’’ என்றார் ஆர்.கே. கிருஷ்ணகுமார்.
இந்த ஓட்டல் கட்டடம் மூரிஷ், ஓரியன்ஸ், ப்ளோரென்டைன் ஆகிய ஸ்டைல்களில் கட்டப்பட்டு உள்ளது. ஆகவே சாதாரண கட்டிடங்களை விட இதை புதுப்பிக்க அதிக காலம் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
‘‘தாஜ் ஓட்டலை புதுப்பிக்க ஓராண்டாவது தேவைப்படும். ஓட்டலை புதுப்பிக்க ரூ.500 கோடி தேவைப்படும்’’ என இந்திய கட்டிட கலை நிறுவன துணைத் தலைவர் பாண்டுரங் பாட்னிஸ் கூறுகிறார். இதை புதுப்பிக்க நவீன தொழில்நுட்பங்களும் தேவைப்படும். இந்தியாவில் சில நிறுவனங்களிடம்தான் அந்த வசதி இருக்கிறது.
அதில் இந்திய தொல்பொருள் சர்வே நிறுவனமும் ஒன்று. ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தாஜ் ஓட்டலில் ஒரு ச.அடி இடத்தை புதுப்பிக்க ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை தேவைப்படும் என்கிறார்
அடுத்து குறி பெங்களூரு!?
உலக நாடுகளில் இந்தியாவில் சுற்றுலா என்றால் காஷ்மீர், தாஜ்மஹால் மற்றும் சில இடங்களும், வியாபாரம் என்றால் மும்பை மற்றும் பெங்களூருதான். பெங்களூருவில்தான் பெரும்பாலான நாடுகளின் சேவை மையங்களும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி மையங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிலும் அவுட்சோஸ்சிங் வேலைகளில் முன்னுரிமை பெறுவது பெங்களூருதான். இதற்காக அமெரிக்க அகராதிகளில் கூட பெங்களூர்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அந்த அளவுக்க முன்னுரிமை பெற்றுள்ளது பெங்களூரு. தீவிரவாதிகளின் அடுத்த கட்ட தாக்குதல் அங்கே நடக்கலாம் என்று பல்வேறு முனைகளில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மும்பையின் தாக்குதலை விட பெங்களூர் தாக்குதல் இழப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. எனவே பெங்களூருவில் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ?
கடந்த 26ம் தேதி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை தகர்க்கும் திட்டமோடு மும்பையில் உள்நுழைந்த 12 தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டம் இந்தியாவை சோதித்தது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு தீவிரவாதிகளின் வெறிச்செயல் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வரும் வழியிலேயே அவர்களின் கோர ஆட்டம் தொடங்கிவிட்டது. முதலில் இந்திய கடற்படை அதிகாரிகள் இருவர், அடுத்து 5 மீனவர்கள் அதற்கடுத்து பல்வேறு குழுக்களாக பிரிந்து மும்பை சத்திரபதி ரயில் நிலையம், நரிமன் இல்லம், தாஜ் ஓட்டல், என சிக்கிய இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு துப்பாகிக்களின் கோர பசிக்கு இரையாக்கினர். இது போதாதென்று ஓட்டல்களில் இருந்த நபர்களை பிணையக்கைதியாக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 60 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய முப்படையினர் மற்றும் அதிரடிப்படை கமாண்டோக்கள் ஆகியோர் இணைந்து போராடியதில் அனைவரும் மீட்கப்பட்டாலும் பொருளாதார ரீதியாக கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருவதையே தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். இது போதாதென்று இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, மற்றும் டி20 யில் ஆடுவதற்கு வரும் ஆஸ்திரேலிய அணி உட்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இந்தியாவிற்கு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
தீவிரவாதிகள் இதைத்தான் எதிர்பார்த்தனர். எது எப்படி இருந்தாலும் இது இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள ஒரு கரும்புள்ளியாகவே கருதப்பட வேண்டிய கட்டாயம்.
இந்தியாவில் தொடர்ச்சியாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருப்பது மிகவும் கவனத்துக்குரியது. பல்வேறு வருடங்களாகவே உளவுத்துறையில் சரியான ஆட்கள் இல்லை என்று பல்வ«று பத்திரிக்ககைகளே இந்த செய்தியை வெளியிட்டுள்ள போதிலும் அரசு கவனக்குறைவாகவே இருந்து வருகிறது நம்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில்.
இன்னொன்று நமது நாட்டு இராணுவ தளவாடங்கள் குறித்த விபரங்களையும் இந்திய மீடியாக்கள் விமர்சனம் செய்தவாறே உள்ளன. ஏனெனில் பழைய மிக் ரக போர் விமானங்கள், பழைய தொழில்நுட்ப நீர்மூழ்கி கப்பல்கள், இப்படி பாதிக்குப்பாதி பழைய நுட்பங்களாகவே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியபின் அவசர அவசரமாக ரஷ்யாவிடம் ஒரு நீர்மூழ்கிக்கப்பல் வாங்கப்பட்டது.
ஆனால் இந்தியாவிற்கு வழங்கவுள்ள நீர்மூழ்கிகப்பல்தான் ரஷ்யாவில் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இப்படி நமது பாதுகாப்பில் பல்வேறு குழப்பங்கள் இருந்துவருகின்றன. அதோடு இந்தியாவின் உளவு அமைப்பான ரா வில் ஏற்பட்டுள்ள ஈகோ மோதல்களால் சரியான தகவல்களை பெற்றாலும் அது குறித்து விசாரிப்பதில் ஏற்படும் குழப்பங்கள் என அனைத்திலும் இந்தியாவின் பாதுகாப்பு ஸ்திரதன்மை அதிகமாக வலுகுறைந்தே காணப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு குறித்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். ஏனெனில் நம் ஊடகங்களை நம்மை விட தீவிரவாதிகள்தான் கவனித்து வருகின்றனர். அதன் மூலமே நாட்டில் ஏற்படும் நிலவரங்களை அவர்கள் அறிந்துக்கொண்டு நமது பலவீனங்களை பயன்படுத்திகொள்கின்றனர்.
முதல்கட்டமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் இடங்களில் நமது பாதுகாப்பு முறைகளை முழுவதும் நவீனப்படுத்த வேண்டும். என்னதான் வான்வெளி உட்பட நமது சாதனைகள் பலவிதம் என்றாலும் நமது அடிப்படை பாதுகாப்பு சரியாக இல்லையென்றால் நமது சாதனைகள் அனைத்தும் அவர்கள் வசமாகிவிடும்.
தீவிரவாதிகளின் கோர தாக்குதலுக்கு பலியான 195 பேரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!.
வீர வணக்கம்!
இந்திய வரலாற்றின் ஒரு கருப்பு நாளாக அமைந்துவிட்டது மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல். கடந்த 26ம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற சுமார் 12 பேர் கொண்ட கும்பல் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கணணில் கண்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தியது இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை ஆட்டிப்படைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
மும்பையின் முக்கிய இடங்களான சத்திரபதி சிவாஜி, தாஜ் ஓட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நரிமன் இல்லாம் போன்றவற்றி்ல் கண் மண் தெரியால் துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 195 பேர் பலியாகியுள்ளனர். இதில் 15 வெளிநாட்டவர்கள் அடக்கம்.
இதில் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் புரிய சென்ற ஹேமந்த் கர்காரே, பெங்களுரைச் சேர்ந்த மேஜர் சந்தீ்ப் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சுட்டுக்கு பலியாகினர். அவர்களின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அதோடு கிட்டத்தட்ட 64 மணி நேரம் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் புரிந்து தீவிரவாதிகளால் அதிகப்பட்ச பேரழிவு ஏற்படாத வண்ணம் செயலாற்றிய வீரர்களுக்கு நம் அனைவரின் சார்பில் வீர வணக்கம்.
அதோடு நாட்டில் தீவிரவாதிகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. பெங்களுர், மும்பை மற்றும் இதர இடங்களில் வெடித்த குண்டுகளால் நமது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. தீவிரவாதிகளும் அதைத்தான் எதிர்பார்த்தார்களோ என்று என்னதோணுகிறது. ஆனாலும் நம் நாட்டில் தீவிரவாதத்திற்கெதிரான சட்டம் கடுமையாக இல்லை. எனவே இனியாவது அரசாங்கமும், அரசியல்வாதிகளும் விழித்துக்கொண்டு நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
Recent Comments