Archive for December 14, 2008
இன்றைய கட்டுரை:5 வச்சா பத்து ரூபா… 10 வச்சா 20 ரூபா…!: உலக மெகா மோசடி! ?
சாலை ஓரங்களில் 3 சீட்டு மோடி மஸ்தான்கள் இப்படி கூவி, கூவி அழைப்பதை பார்த்திருக்கலாம். படிக்காத, ஏழை மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் ஏமாறுவது வழக்கம். சில நேரங்களில் மாடி வீட்டு மைனர்கள் கூட இவர்களிடம் ஏமாறுவார்கள். வசீகர பேச்சும் கை மாற்றும் கலையும்தான் இந்த மோடி மஸ்தான்களின் முதல்.
இதே வேலையை அமெரிக்காவில் கோட், சூட் போட்ட ஒரு ‘சீமான்’ செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் அவர் அடித்த தொகை, 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஒரு நாட்டின் பட்ஜெட் தொகையில் கால்வாசியை ‘ஸ்வாகா’ செய்த அந்த அமெரிக்க சீமான் பெர்னார்ட் மேடாப் (70). 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர்.
இவரா, இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டது என்று அமெரிக்காவில் அதிர்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது. சிங்கிள் பெட்ரூம் பெஞ்சமின் முதல் கோடிகளில் புரளும் பிரெட் வில்போனும் இந்த மோசடியில் ‘கிளீன் போல்ட்’ ஆனதுதான் பரிதாபம்.
இந்த தள்ளாத வயதில் பெர்னார்ட் மேடாப் அப்படி என்னதான் மோசடி செய்துவிட்டார்?
பங்குச்சந்தை பண ‘விளையாட்டில்’ இளம் வயதிலேயே கைதேர்ந்த பெர்னார்டு தன்னுடைய 22 வயதில் 1960ல் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை நியூயார்க் நகரில் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் தங்களுடைய பணம் குட்டி மேல் குட்டி போட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவரது குறி. அவர்களிடம் சென்று, ‘‘உங்கள் பணத்தை என் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து எங்குமே இல்லாத அளவுக்கு லாபத்துடன் திருப்பி தருகிறேன்’’ என்று உறுதி அளித்தார். 3 சதவீதம், 5 சதவீதம் என்று லாபம் கிடைத்த நிலையில், இவர் குறைந்தபட்சம் 10 சதவீதம் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
பெர்னார்டின் பேச்சையும், பணக்கட்டுகளை எண்ணும் ஆசையுடனும் இருந்த ஏராளமானவர்கள் கட்டுக்கட்டாக டாலர்களை கொண்டு வந்து நீட்டினர். சொன்னதை விட ஒருபடி மேலே சென்று டாலர்களை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று சகட்டுமேனிக்கு அள்ளித்தர ஆரம்பித்தார்.
ஒரு முறை லாபம் கண்டவர்கள், மீண்டும், மீண்டும் டாலர்களை கொண்டு வந்து கொட்டினர். கோடீஸ்வரர்கள் எல்லாம் பெர்னார்ட்டையும், அவரது நிறுவனத்தையும் அப்படியே நம்பினர். பெர்னார்டின் நிறுவனம் நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல இடங்களில் வளர ஆரம்பித்தது. அவருடைய சொத்தும் அந்தஸ்தும் பல மடங்கு உயர ஆரம்பித்தது.
ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் என பலர் பெர்னார்ட்டை நம்பினர் என்றால் இவரது கில்லாடித்தனம் விளங்கும்.
பெர்னார்ட் செய்தது இதுதான். முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார்.
இந்த விஷயம் இப்போதுதான் வெளியே வந்துள்ளது. அதுவும் அவரது வாயாலேயே வெளிவந்து மூலையில் முடங்கிவிட்டார். எந்த பங்குச்சந்தை பெயரைச் சொல்லி வளர்ந்தாரோ, அதே பங்குச்சந்தையால் வீழ்ந்துள்ளார். இவரது பொன்முட்டையிடும் திட்டம் வெளியே வந்ததும் ஒரு சுவாரசியமான விஷயம்.
அமெரிக்காவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து கோடீஸ்வரர்கள் எல்லாம் ஓட்டாண்டிகளாக மாறிக் கொண்டிருந்த நிலையில், பலர் எங்கெல்லாம் முதலீடு செய்திருந்தார்களோ அதையெல்லாம் திருப்பி எடுக்க ஆரம்பித்தனர்.
இப்படித்தான் பெர்னார்டிடம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்தனர். பெர்னார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அவரிடம் சென்று, ‘‘நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை திரும்பி கேட்கின்றனர். இதுவரையில் கேட்டுள்ளவர்களுக்கு மட்டும் 35,300 கோடி ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றனர். மேலும், 3 மாதமாக சம்பளம் தராததால் அதையும் கேட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை அலுவலகத்தில் வைத்து பேச விரும்பவில்லை என்று கூறிய பெர்னார்ட், வீட்டில் வைத்து இதுகுறித்து பேசலாம் என்று கூறிச்சென்றுவிட்டார்.
ஏற்கனவே நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சந்தேகப்பட்ட ஊழியர்கள் மொத்தமாக வீட்டுக்கு சென்று நின்றுவிட்டனர். அப்போதுதான் பெர்னார்ட் ‘திருவாய்’ மலர்ந்தார். ‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது’’ என்றார்.
அதிர்ச்சி அடைந்த மகன்களே பங்குச்சந்தை கமிஷனுக்கு தகவல் தெரிவித்ததாக ‘வால் ஸ்டிரிட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. கடைசி நேரத்தில் 10 கோடி டாலர் வரை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாரி வழங்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கமிஷனின் தலைவரும் உறுப்பினர்களும் எப்.பி.ஐ.யிடம் புகார் செய்தனர்.
எப்.பி.ஐ. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நீதிமன்ற வளாகமே கட்சி கூட்டம் நடக்கும் இடம்போல் ஆகிவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் ஸ்டான்டன், பெர்னார்டின் சொத்துக்களையும், அவரது நிறுவனத்தையும் உடனடியாக முடக்கி வைக்க உத்தரவிட்டார். வக்கீல் லீ ரிச்சர்ட் என்பவரை நீதிமன்ற மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.
முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், புளோரிடா ஆகிய இடங்களிலும், பிரான்ஸ், சவுதியில் உள்ள பனைமர கடற்கரையிலும் பலகோடி சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பெர்னார்டுக்கு சொந்தமாக ஒரு சொகுசு கப்பலும் இருப்பதை எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இப்போது பெர்னார்ட் சிறையில் 1, 2, 3 என எண்ணிக் கொண்டிருக்கிறார். ?
காலைத்துளிகள்
மாருதி 800 ரக காருக்கு இன்று 25வது பிறந்தநாள்
புதுடில்லி: மாருதி 800 காருக்கு இன்று 25வது பிறந்தநாள். மக்கள் விரும்பி பயன்படுத்தி வரும் மாருதி 800 ரக கார், முதல் முதலில், 1983ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி குர்கான் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தது. இன்று அதற்கு 25வது பிறந்தநாள். இந்த 25 ஆண்டுகளில், பல ரக கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், மாருதிக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. குறைந்தவிலையிலான, சிறிய ரக கார் என்பதால், இதற்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. மாருதி 800 ரக காரின் வெற்றிக்குப் பிறகே, இது போன்ற சிறிய ரக கார்கள், பல்வேறு நிறுவனங்களால் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை, மாருதி உத்யோக் நிறுவனத்தில் இருந்து, 27 லட்சத்து 36 ஆயிரத்து 46, மாருதி 800 ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 914 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும் மாருதி 800 ரக கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. இது போன்று, வேறு எந்த ரக கார்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது இல்லை. மாருதி 800 ரக கார்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆண்டுக்கு 40 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து இதே எண்ணிக்கையில் கார் விற்பனை இருந்தது. அமோக வரவேற்பு இருந்தாலும், உற்பத்தி திறன் குறைவாக இருந்ததால், சில ஆண்டுகளுக்கு இதே நிலை நீடித்தது. சந்தையில் மாருதி 800 ரக கார்கள் அறிமுகமான பிறகு தான், வாகன உற்பத்தித்துறை பெரிதும் வளர்ச்சி கண்டது. மாருதி 800 ரக கார்கள் அறிமுகமான போது, தொடர்ந்து 1997ம் ஆண்டு வரை, ஒரே மாதிரியான மாடல்கள் மட்டுமே வந்தன. அதற்கு பின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள கார்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால், இன்ஜினின் திறன் தொடர்ந்து 796 சி.சி.,யாகவே நீடிக்கிறது. 1990களில் தான் போர்டு கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லக் கூடிய காராக மாருதி 800 இருந்ததால், இதன் தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களும் பின்பற்றத்துவங்கின. மாருதிக்கு முன், பெரும்பாலும் இந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசடர் மற்றும் பியட் கார்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மாருதி 800 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அது போன்ற சிறிய ரக கார்கள் உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டத்துவங்கின.
வரும் 21ம் தேதி திறக்கப்படுகிறது தாஜ் ஓட்டல்
மும்பை: மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஓட்டல் வரும் 21ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் அறைகளும் வாடகைக்கு விடப்படும். இது தொடர்பாக இந்தியன் ஓட்டல்கள் கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயங்கரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தாஜ் ஓட்டல், வரும் 21ம் தேதி மாலை 7.00 மணிக்கு திறக்கப்படும். இருப்பினும், ஓட்டலின் ஹெரிடேஜ் பிரிவு, பலத்த சேதமடைந்துள்ளதால், அது திறக்கப்பட நாட்களாகும்‘ என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
வட்டி குறைகிறது; வீடு விலை குறையுமா? காத்திருக்கிறது பங்குச் சந்தை
பங்குச் சந்தை இந்த வாரம் பொதுவாக நல்லபடியாகவே இருந்தது. புதன் வரை மேலே ஏறிச் சென்ற சந்தை, வியாழனும், வெள்ளியும் அந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொண்டது. ஏனெனில், சமீபத்திய போக்குகள் என்னவென்றால், ஒரு நாள், ஒரு நல்ல செய்திக்காக ஏறினால், ஒரு கெட்ட செய்திக்காக குறைந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால், விதி விலக்காக இந்த வாரம் சந்தை நிலை பெற்றிருக்கிறது. தொழில் வளர்ச்சி புள்ளி விவரம் அக்டோபரில் எப்படி இருக்கப்போகிறதோ என்ற நினைப்பிலே வியாழனன்று சந்தைகள் கீழேயே துவங்கின. இறுதியாக, ரிலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., கவுன்ட்டர்களில் அதிகம் பங்குகள் வாங்கப்பட்டதால், சந்தை ஒன்பது புள்ளிகள் மட்டுமே கீழே முடிவடைந்தது. வெள்ளியன்று காலை முதலே சந்தை கீழேயே இருந்தது. அமெரிக்க அரசு, ஆட்டோ கம்பெனிகளூக்கு அளிக்கவிருந்த 1,500 கோடி டாலர் (ரூ.75 ஆயிரம் கோடி) பேக்கேஜ் ஏற்றுக்கொள்ளப்படாததால், உலகளவில் சந்தைகள் மறுபடி கீழேயே ஆரம்பித்தன. இந்தியாவிலும் சந்தை கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அளவு இறங்கியே இருந்தது. மதியம் அளவில் வந்த ஒரு செய்தி தான் சந்தையை தூக்கி விட்டது. இந்திய அரசு இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம், சி.ஆர்.ஆர்., விகிதங்களை குறைக்கலாம் போன்று வந்த செய்திகள் சந்தையை கூட்டிச் சென்றது. அதாவது, கீழே இருந்த சந்தை நஷ்டங்கள் அவ்வளவையும் போக்கி லாபத்திலும் வந்து முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 44 புள்ளிகள் கூடி 9,690 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை இரண்டு புள்ளிகள் கூடி 2,921 புள்ளிகளில் முடிவடைந்தது. அக்டோபர் மாத தொழில் வளர்ச்சி புள்ளி விவரம் வெள்ளியன்று வெளியானது. அது, -0.4 சதவீதமாக இருந்தது. அதாவது, நெகடிவாக இருந்தது. சாதாரணமாக வளர்ச்சி சிறிது குறைந்து இருக்கும். ஆனால், நெகடிவாக இருக்காது. இது போன்று நடந்தது இந்திய சரித்திரத்திலேயே இரண்டாவது முறை. பலரும் இது போன்ற ஒரு இறக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2,048 கோடி ரூபாய்களுக்கு பங்குகள் வாங்கியிருப்பது நல்ல ஒரு அறிகுறி. அது, சந்தை சிறிது மேலே செல்லக் காரணமாக இருந்திருக்கிறது.
வீட்டுக்கடன்களின் வட்டி விகிதங்கள்: அரசின் கிடுக்கிப் பிடி காரணமாக 20 லட்சத்திற்கும் கீழ் நிறுவனங்கள் கொடுக்கப் போகும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, வீடு வாங்கப் போகிறவர்களை ஊக்குவிக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், வாங்க இருப்பவர்கள் இன்னும் வீட்டு விலை கீழே விழும் என்று காத்திருக்கின்றனர். யார் ஜெயிக்கின்றனர்கள் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். பணவீக்கம் வற்றியது என்று கூறினால் மிகையாகாது. இந்த வாரம் 8 சதவீத அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வார அளவை விட குறைவு. சமீப காலத்தில் அதிகபட்ச அளவாக 12.91 சதவீதம் சென்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது. குறைந்து கொண்டே வரும் பணவீக்கம், ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை குறைக்க உதவும் ஒரு அளவுகோலாகும். பயங்கரவாத பயமுறுத்தல்களுக்கு பயந்து போயிருக்கும் இந்திய நிறுவனங்கள், தங்களது செக்யூரிட்டியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தீ தடுப்பு, அலாரங்கள் போன்றவைகளை வாங்கி நிறுவ ஆரம்பித்துள்ளன. இதனால், இவற்றை தயாரிக்கும் கம்பெனிகளுக்கு தற்போது நல்ல காலம் தான். குறிப்பாக, நித்தின் தீ தடுப்பு சிஸ்டம்ஸ், øகாம் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மேலே சென்று வருகின்றன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ளன. சமீபத்திய தேர்தல் முடிவுகள், மத்திய அரசிற்கு சாதகமாக உள்ளன. வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அடுத்த வாரமும் சந்தை பெரிய அளவில் மேலே செல்லாவிடினும் நிலை பெற்று இருக்க வேண்டும். ஏதேனும் ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் வந்தால், அது சந்தையை இன்னும் பலப்படுத்தும்.
தொழில்துறை: 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி!
டெல்லி: நாட்டின் தொழில்துறை கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அபாயகட்டத்தைத் தொட்டுள்ளது.
இதுவரை மிகக் குறைந்த வளர்ச்சியிலிருந்த தொழில்துறை உற்பத்தி, இப்போது எதிர்மறையாக உள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுரேஷ் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி எதிர்மறையாகச் சென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது கவலை தரும் செய்தி.
இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த அக்டோபரில் தொழில் உற்பத்தி 0.43 சதவிகிதமாகவும், நவம்பரில் அதுவே எதிர்மறையாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தம் இந்தியாவை எந்த அளவு மோசமாக பாதித்துள்ளது ன்பதற்கு இது ஒரு உதாரணம்.
பிரதமர் கடந்த மாதம் அறிவித்த 80 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான சலுகைகள் எந்த மாதிரி ஊக்குவிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்த எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கார் நிறுவனங்கள் திவால் ஆகும் அபாயம்
வாஷிங்டன்: அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் நெருக்கடியைப் போக்க அமெரிக்க நிதித்துறை அறிவித்த 14 பில்லியன் நிதி உதவி மசோதாவுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது அமெரிக்க செனட்.
ஏற்கெனவே இந்த மசோதாவுக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க திவால் நோட்டீஸ் கொடுக்கும் முடிவிலிருப்பதாகவும், அரசு 25 பிலிலியன் டாலர் வரை உதவி செய்தால் இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிறிஸ்லர் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பேசிய அதிபர் புஷ் 14 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்தார். இப்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என அமெரிக்க செனட் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்த பிரச்சினையில் இணக்கமான நிலையை ஏற்படுத்த எவ்வளவோ முயன்றும், செனட் உறுப்பினர்கள் இசையவில்லை.
இதனால் அமெரிக்க கார் நிறுவனங்கள் அனைத்துமே திவால் ஆகும் ஆபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
வீட்டு கடன் வட்டி 8 சதவீதம் குறையும்!
அரசு வங்கிகளில் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கு வட்டி விரைவில் 3 சதவீதம் வரை குறைய உள்ளது. இப்போது 11 சதவீதத்தையொட்டி இருக்கும் வட்டி இனி 8 சதவீதமாகக் குறையும்.
அரசு வங்கி தலைவர்கள், நிதி அமைச்சக அதிகாரிகளை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது வீட்டுக் கடன் வட்டியை குறைக்க அரசு வங்கி தலைவர்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர். மேலும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் தர உறுதி அளித்துள்ளனர்.
நாட்டில் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர், 20 லட்சத்துக்கு குறைவாகத்தான் வாங்குகின்றனர். இப்போது புளோட்டிங் முறையில வட்டி 11 சதவீதமாக உள்ளது. இனி அது 2 முதல் 3 சதவீதம் குறைய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் சில நாட்களில் வெளியிடும் என இந்திய வங்கிகள் சங்க தலைவரும் பேங்க் ஆப் இந்தியா தலைவருமான டி.எஸ். நாராயணசாமி தெரிவித்தார்.
ரூ.5 லட்சம் வரை, ரூ.5 லடசத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை என இரு வித வீட்டுக் கடன் திட்டங்களை வங்கிகள் அறிவிக்க உள்ளன.
இந்நிலையில் வீட்டுக் கடன் வட்டியை வங்கிகள் குறைத்துவிட்டால், ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காரணம், வட்டி அதிகரிப்பால் ஏராளமானோர் வீடு வாங்கும் முடிவை ஒத்திப் போட்டுள்ளனர். அவர்கள் இனி மீண்டும் தங்கள் கனவை நனவாக்க முயற்சிப்பார்கள். அப்போது ரியல் எஸ்டேட் பழையபடி சூடுபிடித்துவிடும் என்கின்றனர் அவர்கள்.
வட்டியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கடன் பரிசீலனை கட்டணத்தை குறைப்பது, அதிக தொகை தருவது, முன்கூட்டியே கடன் அடைப்போருக்கான விதிகளில் மாற்றம் ஆகியவற்றையும் வங்கிகள் அறிவிக்க உள்ளன.
ஜீவன் ஆஸ்தா: எல்ஐசி புது திட்டம்
எல்ஐசி நிறுவனம் ஜீவன் ஆஸ்தா என்ற புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பாலிசி முதிர்வடையும் போது கிடைக்கும் வருமானத்துக்கு இதில் முன்பே உத்தரவாதம் தரப்படுகிறது.
ஒரே ஒரு முறை பிரீமியம் கட்டி இந்த பாலிசியில் சேரலாம். பங்குச் சந்தை ஊசலாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள, வேறு பாதுகாப்பான, லாபம் தரும் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கேற்ப இத்திட்டம் அறிமுகமாவதாக எல்ஐசி தெரிவித்து உள்ளது. ஒன்றரை மாதம் மட்டுமே இத்திட்டம் அமலில் இருக்கும்.
5 ஆண்டு, 10 ஆண்டு என இருவிதமாக திட்டம் உள்ளது. 5 ஆண்டு திட்டத்தில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ஆண்டுக்கு ரூ.90 கூடுதல் வருமானம் கிடைக்கும். 10 ஆண்டு திட்டத்தில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ஆண்டுக்கு ரூ.100 கூடுதல் வருமானம் உண்டு. பாலிசி எடுத்த முதல் ஆண்டில் அசம்பாவிதம் நடந்தால், இன்சூரன்ஸ் தொகையை போல 6 மடஙகு அதிக இழப்பீடு தரப்படும்
Recent Comments