29.12.08:காலைத்துளிகள்
December 29, 2008 at 4:50 AM Leave a comment
பெட்ரோல்- தண்ணீரை விட விலை கம்மி!
டெல்லி: உண்மையாவா… எங்கே… என்கிறீர்களா….? நம்ம ஊரில் தான்!
நாம் ஒரு லிட்டர் மினரல் வாட்டருக்குக் கொடுக்கும் விலையை விட குறைவான விலைக்குத் தான் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தப் புள்ளி விவரத்தைத் தந்துள்ளதும் கூட யாரோ ஒருவர் அல்ல… மத்திய பெட்ரோலியத்துறைதான்.
சர்வதேச சந்தையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய்யின் விலையை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் நீங்கலாக நிறுவனங்கள் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்ன தெரியுமா? 13 ரூபாய்தான். ஒரு லிட்டர் டீசலின் விலை 11 ரூபாய்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய்: 36 அல்லது 37 டாலர்கள் (இந்த மாத தொகுப்பு / இன்றைய மாறும் விலையில்). ஒரு பேரலில் 190 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும் (1 பேரல் என்பது 42 கேலன்கள். 1 கேலன் 4.5 லிட்டர்). ஒரு டாலரின் மதிப்பு 48 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, கச்சா எண்ணெய் ஒரு லிட்டரின் விலை 9 ரூபாய் தான் வருகிறது! இதில் சுத்திகரிப்புச் செலவு லிட்டருக்கு ரூ.2 முதல் 3 வரை சேரும் என்றாலும், பெட்ரோலிய உப பொருட்கள், நாப்தா, கெரோஸின், தார், மெழுகு, லூப்ரிகண்ட் ஆயில்கள்…. இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல்தான் இதுவரை உள்ளூரில் பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் நடக்கிறது. கெரோஸின் விலை இன்று டீஸலுக்கு சமம் என்பதை நினைவில் கொள்க.
ஒரு பேரல் கச்சா எண்ணெயில் 30 லிட்டர் பெட்ரோல், 85 லிட்டர் டீஸல் வரை எடுக்கிறார்கள். இந்தக் கணக்கு வைத்துப் பார்த்தாலும் வரிகள் நீங்கலாக 1 லிட்டர் டீஸலுக்கு ரூ.11-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ம்தான் அடக்க விலையாகிறது. இதைத் தவிர உபரியாகக் கிடைக்கும் பொருட்களில் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம். பிரித்தெடுக்கும் செலவு மட்டும்தான் கெரோசினுக்கெல்லாம்.
இந்தப் பெட்ரோலைத்தான் நாம் லிட்டருக்கு ரூ.50-ம் டீஸல் ரூ.33க்கும் வாங்குகிறோம்.
அரசு மனது வைத்தால் இப்போதுள்ள விலையில் பாதிக்கு பெட்ரோல் விற்கலாம். ரூ.20-க்கு டீஸல் விற்கலாம். அதுவே லாபம்தான். மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பார்த்துக் கொள்ளலாம்.
செய்வார்களா?
அடுத்த மாதத்திலிருந்து கார்களின் விலை உயர்கிறது
புதுடில்லி: அடுத்த மாதத்தில் இருந்து, கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக, கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு குறித்து அறிவிக்க அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. டொயட்டா நிறுவனம், ஜனவரி முதல் தேதியில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயட்டா நிறுவன உதவி மேலாண்மை இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களில் ரூபாய், டாலர் மாற்று மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தை நிலைமை தற்போது கார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாதது‘ என்றார். இருந்தாலும், இந்த விலை உயர்வு மிகவும் அதிக அளவில் இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவன வட்டாரங்கள், ‘சந்தை நிலவரத்தில் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சி இல்லையெனில், கார் தயாரிப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை‘ என்றன
தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஸ்.பி.ஐ., இணையதளம் பாதிப்பு
மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் வங்கிகளின் பெரும்பாலான கிளைகளில் கடந்த வெள்ளிக்கிழமை கம்ப்யூட்டர் நெட்ஒர்க் கில் ஏற்பட்ட கோளாறால் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னை நகரில் பல இடங்களில் ஏ.டி.எம்., மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். வங்கியின் ஒட்டு மொத்த கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வங்கிக்கிளைகளில் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து வங்கியின் துணைப் பொது மேலாளர் ஆர்.பி.சின்கா கூறியதாவது: ஸடேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படவில்லை. இந்தக் கோளாறு சனிக்கிழமை மாலைதான் சரி செய்யப்பட்டது. தற்போது இணையதளம் பழையபடி செயல்பட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட கோளாறால் வங்கியின் எவ்வித பரிமாற்றமும் பாதிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பான எவ்வித தொகுப்பிற்கும் இழப்பு ஏற்படவில்லை. இவ்வாறு சின்கா கூறினார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த கிளைகள், 11 ஆயிரம். இவை ஆன்-லைன் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. மொத்தம் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்க முடியாத இழப்பில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள்!
சென்னை: மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் முதலீடு செயதவர்களுக்கு இந்த 2008ம் ஆண்டில் மட்டும் ரூ.1,50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் முதலீடு செய்யும்போது லாப நஷ்டம் சகஜம்தான் என்றாலும், இந்த ஆண்டுதான் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு பரஸ்பர நிதியில் செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் தொகை.
இந்தியாவில் இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
2007ம் ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,30,000 கோடி. இத்துடன் சேர்த்தால் 2007ம் ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதியில் இருந்த மொத்த முதலீட்டுத் தொகை ரூ.5,50,000 கோடி.
ஆனால் இந்த ஆண்டு ரிவர்ஸில் போய்விட்டது நிலைமை. இந்த மியூச்சுவல் பண்ட்களுக்கு ஏற்பட்ட சரிவால் முதலீட்டில் ரூ.1,50,000 கோடி கரைந்து போய் ரூ. 4,00,000 கோடியாகிவிட்டது.
ஆனாலும் வரவிருக்கும் 2009ல் நிலைமை சரியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்கலும்.
இதற்குப் பெயர்தான் ‘பரஸ்பர நம்பிக்கையோ‘!
இந்தியாவில் பணவாட்டம்! – வங்கிகள் அலறல்
மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டுமுதல் பணவாட்டம் எனப்படும் ஆபத்தான பொருளாதாரச் சூழல் வந்துவிடும் என வங்கிகள் எச்சரித்துள்ளன.
இந்த ஆண்டின் மத்தியில் கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்கம் இப்போது படிப்படியாக குறைந்து 6.61 சதவிகிதத்துக்கு வந்துள்ளது. மார்ச்சுக்குள் இது 3 சதவிகிதமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை மேலும் நீடித்தால் 2009- மத்தியில் பணவீக்கம் இல்லாமல் போய் விடும் என்றும், அடுத்த நிதியாண்டில் பணவீக்கத்துக்கு எதிர்மறையான பணத்தேக்கம் ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அனைத்துப் பொருள்களின் விலையும் அடிமட்டத்துக்கு வீழ்வதையே பணவாட்டம் அல்லது பணத்தேக்கம் (Deflation) என்கிறது பொருளியல். இந்த நிலையை சரியாக்க நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும், வட்டியில்லாக் கடன்களை மக்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்.
சிட்டி பேங்க், எச்டிஎப்சி, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் இதுகுறித்து எச்சரிக்கை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளன.
புத்தாண்டுக்குப் பின் கச்சா எண்ணெய் மேலும் குறையும்!
லண்டன்: புத்தாண்டில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை மேலும் குறையக்கூடும் என்பதே அந்தச் செய்தி.
இப்போது 38 டாலராக உள்ள கச்சா எண்ணெயின் விலை வரும் ஜனவரியில் மேலும் குறைந்து 33 டாலருக்கும் கீழே போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை நிலைப்படுவது அவ்வளவு சுலபத்தில் நிகழாது. இரண்டாவது காலாண்டின் இறுதியில் வேண்டுமானால் ஓரளவு நிலைப்படும் என லண்டனைச் சேர்ந்த பங்குவர்த்தக நிபுணர் நிமித் காமர் கூறியுள்ளார்.
அதேநேரம் இதே நிலை நீடித்து கச்சா எண்ணெய் 30 டாலருக்கும் கீழே சரிந்தால், உலகப் பொருளாதாரம் பின்னடைவை நோக்கித் திரும்பும். அதாவது பணமந்த சூழல் (Deflation) வந்துவிடும். எனவே ஏதாவது ஒரு விலையில் கச்சா எண்ணெய் நிலைப்படுத்தப்ட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு துவக்கத்தில் 100 டாலராக இருந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் மத்தியில் அதுவே 148 டாலர் வரை உயர்ந்தது. இந்தியாவில் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இதுவே காரணமாகக் காட்டப்பட்டது.
இப்போது கச்சா எண்ணெய் விலையும் சரிந்து, இந்தியா கொள்முதல் செய்யும் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆனாலும் இந்தியாவில் ஏறிய விலை இறங்குவதாகத் தெரியவில்லை.
Entry filed under: வணிகம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed