கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
December 24, 2008 at 5:49 AM Leave a comment
கிருஸ்துமஸ் ஸ்பெஷல் : கிருஸ்மஸ் – வரலாற்றுப் பார்வை
பண்டிகை காலங்கள் சுகமானவை. குடும்பத்துடன் அன்பாய், அமைதியாய் செலவிட சில கணங்கள், ஆண்டவனிடம் சில பிரார்த்தனைகள், மன ஓய்வு, புத்தாடை, பரிசுப் பொருள்கள் என சந்தோஷங்கள் எட்டிப்பார்க்கும். இந்துக்களின் தீபாவளி, யுதர்களின் ஹனுக்கா , கிருத்தவர்களின் கிருஸ்மஸ் மற்றும் புது வருடப்பிறப்பென அடுக்கடுக்காய் குளிர்காலத்தில் வரும் பண்டிகளை பட்டியலிடலாம். குறிப்பாக டிசம்பர் மாதம் பண்டிகை காலமாய் பல்வேறு நாகரிகங்களால் வெகு காலமாய் இருந்து வருகின்றது.
ஆதியில் ஸ்கேண்டிநேவியன் மற்றும் ஜெர்மன் நாகரிகத்தில் டிசம்பர் மாத இறுதி பகுதி ‘யுல்‘ பண்டிகையாக கொண்டாடப்பட்டது. யுல் பண்டிகை காலத்தில் பரிசு பொருள்கள் பறிமாற்றிக் கொள்ளப்பட்டன . இந்த தினத்தில் பன்றி ப்ரேர் எனும் பாகன்(Pagan) கடவுளுக்கு பலியிடப்பட்டது. யுல் பண்டிகை காலத்தில் மதுவருந்தி , பெரும் விருந்துகள் பறிமாறப்பட்டன. வீடுகள் பச்சை வண்ணம் கொண்டு அலங்கரிக்கப்பட்டன . யுல் எனும் வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால் அது கிருஸ்மஸையும் குறிக்கும்.
ரோம நாகரிகத்தில் சனி கடவுளின் நினைவாக டிசம்பர் மாதத்தில் ‘சார்டன்லியா‘ எனும் பண்டிகை கொண்டாப்பட்டது. இது ஏழு நாள் பண்டிகை. டிசம்பர் 17ம் தேதி தொடங்கி டிசம்பர் 24 வரை . ரோம பேரரசில் சூரிய வழிபாடு முக்கியமானதாக இருந்தது. ரோம சக்கரவர்த்திக்கு பாதுகாவலனாக சூரியன் இருப்பதாக ஐதிகம். ரோம நாணயங்களில் சோலி இன்விக்டோ காம்டி(SOLI INVICTO COMITI) என்ற முத்திரை உண்டு. கான்ஸ்டான்டின் அரசரின் கிருத்தவ மத மாற்றத்திற்கு பிறகு இந்த முத்திரை நாணயங்களை விட்டு அகன்றது. டிசம்பர் மாதத்தில் இரவு சுருங்கி பகல் நீளும் நாளின் தொடக்கமாய் டிசம்பர் 25 குறிக்கபட்டு சூரிய தேவனுக்கு உகந்த நாளாய் ரோமில் கொண்டாப்பட்டது.
சிலாவிக் நாகரிகத்தில் ‘க்ராச்சுன்‘ எனும் பண்டிகை டிசம்பர் 21ம் நாள் கொண்டாப்பட்டது . ஸ்லாவிக் நாகரிகம் கிழக்கு ஐரோப்பாவில் பரவியிருந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையான நாகரிகம். அவர்களது நம்பிக்கைபடி இந்த இரவில் சாத்தான் மற்றும் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாய் இருக்கும். அவர்கள் நம்பிக்கைபடி இந்நாளில் சூரியன் மறுபிறப்பு கொள்கிறார்.
கிருத்துவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்மஸ் பண்டிகை இல்லாதிருந்தது. பைபிளில் இயேசுவின் பிறந்த தினம் பற்றிய துல்லிய குறிப்புகள் எதுவும் இல்லை. கி.பி நான்காம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன. அதற்கு பின் மெல்ல பரவ ஆரம்பித்த இந்த பண்டிகை ஆறாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை தொட்டது. எட்டாம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியாவிலும் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் பரவின. கிரிஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளில் ஜனவரி 8ம் தேதி கிருஸ்மஸ் பண்டிகையாக கொண்டாப்படுகின்றது . அவர்கள் நம்பிக்கையின் படி இந்த தினத்தில்தான் மூன்று அரசர்கள் கிருஸ்து அரசரை சந்தித்தனர்.
இங்கிலாந்தில் 1647ல் உள்நாட்டு யுத்தம் அரசருக்கு ஆதரவானவர்களுக்கும், பார்லிமண்ட் உறுப்பினர்களுக்கும் இடையே நடந்தது. அதன் முடிவில் அரசர் முதலாம் சார்லஸ் கொல்லப்பட்டார். பார்லிமண்ட் ஆதரவு படைகளுக்கு தலைமை தாங்கிய ஆலிவர் குரோம்வெல் இங்கிலாந்தின் நிர்வாகத்தை கையில் எடுத்தார் . அவர் பதவியில் இருக்கையில் கிருஸமஸ் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது. ஆங்கில ப்ராட்டஸடான்டுகள் கிருஸமஸ் கிருத்தவத்திற்கு எதிரானது மற்றும் பாகன் வழிப்பாடு முறைகளை தழுவி வந்தது என்ற கருத்தில் இருந்ததால் இந்த தடையை கொண்டு வந்தனர் . இந்த ப்ராட்டஸ்டான்டுகள் ‘ப்யுரிட்டன்‘ என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். 1860ல் மன்னராட்சி மீண்டும் அமைக்கப்பட்ட பிறகு இரண்டாம் சார்லஸ் மன்னராக இருந்த காலத்தில் இந்த தடை நீக்கப்பட்டது.
உலகமெங்கும் கிருஸ்மஸ் மரம் வைக்கும் பழக்கத்தை பிரபலபடுத்தியது இங்கிலாந்தின் அரச குடும்பமே. விக்டோரியா அரசியின் கணவர் ஜெர்மனியை சார்ந்தவர் . அது வரை ஜெர்மனியில் பழக்கமாய் இருந்த கிருஸ்மஸ் மர பழக்கம் விக்டோரியா மகராணியால் இங்கிலாந்திற்கும் வந்தது. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற வார்த்தைகளுகேற்ப்ப இந்த பழக்கம் இங்கிலாந்தெங்கும் பரவலாயிற்று. இங்கிலாந்தின் காலனி நாடுகளிலும் இப்பழக்கம் பரவலாயிற்று .
அமெரிக்கா உருவான காலகட்டத்தில் நியுயார்க் பகுதியில் கிருஸ்மஸ் பண்டிகையாக இருந்தது, ஆனால் பாஸ்டன் பகுதிகளில் குடியேறிய ப்யுரிட்டன் வகையை சார்ந்த கிருத்தவர்களால் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை. அமெரிக்க அரசியலமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டு நடந்த முதல் அமெரிக்க நாடாளுமன்றம் டிசம்பர் 25ம் தேதியை விடுமுறையாக அறிவிக்கவில்லை. கிருஸ்மஸ் தினத்தன்று காங்கிரஸ் முழு அளவில் நடந்தது . அமெரிக்காவில் 1870ம் ஆண்டுதான் முழு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. துவக்க காலத்தில் இது குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடும் பண்டிகையாக இல்லை . பெரு விழாவாக ஆட்டம், பாட்டுகளோடு கொண்டாப்பட்டது.1828 ம் ஆண்டு கிருஸ்மஸ் பண்டிகை திருவிழாவில் நடந்த கலவரத்தினால் நியுயார்க் நகர கவுன்சில் முதன்முதலில் காவல் படையை அமைத்தது. அதற்கு பிறகே கிருஸ்மஸ் பண்டிகை திருவிழா கொண்டாடங்களிருந்து வீட்டினுள் கொண்டாடப்படும் குடும்ப பண்டிகையாக மாற ஆரம்பித்தது .
தஞ்சை அருகே இருந்த போது பள்ளி படிப்பின் போது மாதா கோவில் விழாதான் கிருஸ்மஸை விட சிறப்பாய் இருக்கும். ஊரேங்கும் தேரிழுப்பு ஆரவாரமாய் இருக்கும். மாதா கோவிலில் ரங்க ராட்டினங்கள் வந்து சேரும்.நடக்க இடமில்லாமல் கடை வீதியில் கூட்டம் இருக்கும். பின்பு வாழ்க்கை கல்லூரி பக்கம் கொண்டு போன போது நண்பன் கொண்டு வருவதாய் சொன்ன வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒயினிலும், கேக்கிலும் ஆர்வம் இருந்தது. அதை கடைசி வரை சாப்பிடவே இல்லை. நான்கு வருடங்கள் பறந்து விட்டது. அமெரிக்கா வந்த பின்தான் கிருஸ்மஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களின் முழு பரிணாமங்களை காண முடிந்தது.
அமெரிக்காவில் பனி படர்ந்த கிருஸ்மஸ் தினங்கள் (White Christmas) விஷேசமாக கருதப்படுகின்றது.
கிருஸ்மஸ் வரும் நாளை குடும்பங்கள் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. டிசம்பர் தொடங்கியவுடன் வரும் முதல் வார விடுமுறையில் வீட்டை சுற்றி பல குடும்பங்கள் விதவிதமாய் வீட்டை அலங்கரிப்பதை காண முடிகிறது. மரபு வழியாக கிருஸமஸ் அலங்காரங்கள் சிகப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் அமையும் . கண் கவரும் மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கிருஸ்மஸ் மரங்கள் கார்களின் மேல் கட்டப்பட்டும், ட்ரக்குகளின் பின்புறம் சவாரி செய்தும் வந்து இறங்குகின்றன. கிருஸ்மஸ் நெருங்க நெருங்க அங்காடிகளில் கூட்டம் வழிய ஆரம்பிக்கிறது. ஏதேனும் ஷாப்பிங் சென்டர் போனால் பார்க்கிங் செய்ய பிரம்ம பிரயத்தனந்தான் . அலுவலகத்தில் வேலை மிதமாகிறது. எல்லோரிடமும் வரபோகும் விடுமுறைக்கான எதிர்பார்ப்பு தெரிய ஆரம்பிக்கிறது. மொத்ததில் வருடத்தின் ரசிக்கதக்க அலங்காரமாய் டிசம்பரின் கடைசி இருவாரங்கள் அமைகிறன.
Entry filed under: பொதுவானவை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed