23.12.08:மாலைத்துளிகள்
December 23, 2008 at 10:55 AM Leave a comment
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது
மும்பை : சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வரும் இந்த வேளையிலும் கூட, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவானது. எனவே அது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கும் சுரேஷ் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சியை சந்தித்ததில்லை. மற்ற ஆசிய நாடுகள் வீழ்ச்சியை நோக்கி சென்றபோதும் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்றார். தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை, நமது வலிமையை சோதிக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.
சாத்தான்குளத்தில் மீண்டும் டைட்டானியம் தொழிற்சாலை வருமா ?
சென்னை : ரூ.2,500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் டையாக்ஸைட் தொழிற்சாலை அமைக்க டாடா ஸ்டா ஸ்டீல் முன்வந்து, பின்னர் அதற்கு தேவையான நிலம் கிடைக்காததால் அந்த திட்டத்தை அது கைவிட்டிருந்தது. திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்த டாடா ஸ்டீல் நிறுவனம், அதற்காக சாத்தான்குளம் மற்றும் திருநெல்வேலியில் திறந்திருந்த அலுவலகங்களையும் மூடி விட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்த அவர்களுக்கு 10,000 ஏக்கர் நிலம் தேவைப்பட, அப்போது அவர்களுக்கு கிடைத்ததோ வெறும் 25 ஏக்கர் நிலம் தான். இப்போது அந்த நிறுவனம், தங்களுக்கு அங்கு 300 ஏக்கர் கிடைத்து விட்டதாகவும், மூடப்பட்ட திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனால் தொழிற்சாலை அமைவதும் அமையாததும் தமிழ்நாடு அரசின் கையில்தான் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது. சென்னை வந்திருந்த டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குநர் முத்துராமன் இது குறித்து பேசியபோது, எங்களுக்கு சாத்தான்குளம் பகுதியில் இதுவரை 300 ஏக்கர் நிலம் கிடைத்திருக்கிறது என்றும், அதன் எதிர்காலம் தமிழ்நாடு அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் சொன்னார். சாத்தான்குளம் பகுதியில் அவர்களுக்கு தேவையான நிலம் கிடைக்காததற்கு பெரும் இடஞ்சலாக இருந்தது நிலம் உரிமையாளர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடம், அதற்கான முறையான பத்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். மேலும் பெரும்பாலான நில உரிமையாளர்களிடம் மூல பத்திரம் இல்லாததும், பெரும்பாலான நிலத்தின் சொந்தக்காரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருப்பதும், நிலத்தை வாங்க முடியாததற்கு காரணம் என்கிறார்கள். சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் டையாக்ஸைட் தொழிற்சாலை அமைக்க, தமிழ்நாடு அரசுடன் டாடா ஸ்டீல் நிறுவனம் 2007 ஜூனில் ஒப்பந்தம் செய்திருந்தது.
71 ஆண்டுகளுக்குப்பின் நஷ்டத்தை சந்திக்கும் டொயோட்டா
நகோயா ( ஜப்பான் ) : உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஜப்பானின் டொயோட்டா, 71 ஆண்டுகளுக்குப்பின் இப்போது முதல் முறையாக பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கார்களுக்கான டிமாண்ட் குறைந்து, அதனால் விற்பனை பெருமளவில் பாதித்திருப்பதால், அது முதல் முறையாக ‘ ஆப்பரேட்டிங் லாஸ் ‘ஐ சந்திக்கிறது. இந்த வருடத்தில் 600 பில்லியன் யென் லாபம் சம்பாதிக்கும் என்று முதலில் சொல்லப்பட்டதை மீறி, இப்போது 150 பில்லியன் யென் ( 1.7 பில்லியன் டாலர் ) நஷ்டம் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. டொயோட்டாவின் தலைவர் கட்சுவாகி வாடனாபே இதுகுறித்து பேசியபோது, நாங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்றார். அவசர கால உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் நாங்கள், இன்றும் பாதாளத்திற்கு செல்லாமல் இருக்கிறோம் என்றும் சொன்னார். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் டோயோட்டாவை காப்பாற்றும் நடவடிக்கையாக வாடனாபே, ஒப்பந்த ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கியிருக்கிறார். தயாரிப்பை குறைத்திருக்கிறார். <உயர் அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்திருக்கிறார்.கம்பெனி போர்டு மெம்பர்களின் போனஸை கூட நிறுத்திவிட்டார். கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போனதும் யென் ( ஜப்பான் கரன்சி ) னின் மதிப்பு உயர்ந்து விட்டதும்தான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். இதற்கு முன் டொயோட்டோவுக்கு 1938 மார்ச்சில்தான் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
சிமெண்டு ஏற்றுமதிக்கு தடை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: சிமெண்டு ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
உள்நாட்டில் சிமெண்டு விலை உயர்ந்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், சிமெண்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால் தற்போது உள்நாட்டில் பல்வேறு நிறுவனங்களும் சிமெண்ட் விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன.
எனவே சிமெண்ட் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை, மத்திய ஏற்றுமதி வர்த்தக கழகம் பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புது டெல்லி: அயல்நாடுகளில் இருந்து சுத்தப்படுத்தாத சர்க்கைரையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சூசகமாக தெரிவித்தார்.
புது டெல்லியில் நேற்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் [ Indian Sugar Mills Association ( ISMA) ] 74 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து சரத் பவார் பேசுகையில், 2008-09 ஆம் ஆண்டில் கரும்பு விளைச்சல், அதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை உற்பத்தி தேவையான அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் சில மாநிலங்களில் இருந்து வரும் தகவல்களில் இருந்து, முன்னர் மதிப்பிட்டதைவிட கரும்பு உற்பத்தி குறையும் என்று தெரிகிறது. சர்க்கரை உற்பத்தியை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக அரசு எடுக்கும் முடிவு சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் நன்மையாக இருப்பதுடன், பயன்படுத்தும் மக்களுக்கும் பயன்தர கூடிய வகையில் இருக்கும் என்று கூறினார்.
மத்திய அரசு நிச்சயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட, (கொள்முதல் விலை) மாநில அரசுகள் கூடுதல் விலை, போனஸ் அறிவிப்பது பற்றி குறிப்பிட்டு பேசிய பவார், இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்த உணவு அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாநில அரசுகள் கூடுதல் விலை அறிவிக்கும் பழக்கத்தை தொடர கூடாது என்று கருத்தொற்றுமை ஏற்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துரதிஷ்டவசமாக எந்த கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை.
மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை கூட, மாநில அரசுகள் கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்க கூடாது என்றும், மத்திய அரசு அறிவிக்கும் விலையே சட்டபூர்வமானது என்று சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் ஒரே கட்சி பலமாக இல்லாமல், பல கட்சி ஆதரவுடன் அரசு இருப்பதால் சாத்தியமில்லாமல் இருக்கிறது இந்த நிலை மாறினால் தான் சட்டதிருத்தம் கொண்டுவர முடியும் என்று பவார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் 62 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் இப்போது 49 லட்சம் டன் சர்க்கரைதான் உற்பத்தியாகும் என்று தெரிகிறது. இதே போல் உத்தரபிரதேசம். கர்நாடாகா போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று தெரிகிறது என்று சரத்பவார் தெரிவித்தார்.
மலேசிய எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4700 பேர் வேலை இழப்பு!
கோலாலம்பூர்: அடுத்த 3 மாதங்களுக்குள் 4700 மலேசியர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துளளார்.
இதுகுறித்து அந்நாட்டின் மனித வள அமைச்சர் எஸ். சுப்பிரமணியன் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் சற்று நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் குறிப்பாக எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. 102 எலக்ட்ரானிக் நிறுவனங்களில் பணியாற்றும் 4749 பேர் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் வெளியேற்றப்பட்டே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழல் புரிந்து, தொழிலாளர் சங்கங்கள் அமைதி காப்பது பெரும் நிறைவாக உள்ளது. மற்ற நாட்டு தொழிற்சங்கங்களைப் போல வன்முறையில் இறங்காமல், எங்கள் நாட்டவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளனர்.
இனி மாவட்டம் தோறும் உள்ள தொழில் நிறுவனங்களைக் கண்காணித்து, அதில் வேலை இழப்புக்கு ஆளாகும் நபர்களின் விவரங்களைச் சேகரிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிவது குறித்தும் முடிவு செய்யப்படும், என்றார்.
சர்வதேச பொருளாதார மந்தத்தில் மலேஷியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் வளளர்ச்சியை முடுக்கிவிட மலேசிய அரசு 2.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில். மத்திய ஜவுளி அமைச்சகம், கைத்தறி துறைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடியிலான உதவி திட்டத்தை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி இருப்பதாக மக்களவையில் ஜவுளி துறை அமைச்சர் சங்கராசிங் வகேலா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்விக்கு எழுத்து பூர்வமான பதிலளிக்கையில், இந்த திட்டத்தின் படி கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவைகளுக்கு சலுகை வட்டியாக 7 விழுக்காடு வட்டிக்கு கடன் கொடுக்கப்படும்.
அஸ்ஸாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாக்கி இருப்பதாக, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. இவை விசைத்தறியின் போட்டியை சமாளிக்க இயலாமை, கடன் கிடைக்காமல் இருப்பது, தற்போதைய சந்தை நிலவரத்திறக்கு ஏற்ப மாற முடியாமல் இருப்பது போன்ற காரணங்களினால் கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவில் உள்ள கைத்தறி கூடங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் நெசவாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வகேலா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இந்தியாவை பாதிக்காமல் இருக்கும் வகையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என்று அரசு சூசகமாக தெரிவித்தது.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு, இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தது.
தற்போது பணவீக்கம் குறைந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறையாமல் இருக்கும் பொருட்டு வட்டியை குறைப்பதுடன், பொருளாதார சீர்திருத்தத்தை முழு வேகத்தில் செயல்படுத்த அரசு எண்ணியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆய்வறிக்கையில், மற்ற நாடுகளில் பணத்தின் தேவை அதிகரிப்பதால், இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது. நிதி நெருக்கடியால் தொடர்ந்து உற்பத்தி துறையில் பாதிப்பு இருக்கும்.
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாதத்தில் வளர்ச்சி குறையும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாகவே இருக்கும்.
சென்ற ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருந்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், ஏற்றுமதி குறைந்துள்ளது. அத்துடன் அந்நிய முதலீடு வருவதும் தடைபட்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு பண்டங்களின் விலையும்,. கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது, பணவீக்கம். 2007 மார்ச் மாத நிலைக்கு குறைவதற்கு உதவிகரமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 12.91% ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 6.84% ஆக குறைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததை தொடர்ந்து, ஏற்கனவே பல வங்கிகள் ரியல் எஸ்டேட், வீட்டு வசதி, சிறு, நடுத்தர தொழில்கள் போன்றவைகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. சமீபகாலமாக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் நிதி சந்தையில் ரூ.3 லட்சம் கோடி வரை பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
ரயில்வே வருவாய் 14.49 விழுக்காடு அதிகரிப்பு
நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் ரயில்வேத் துறையின் வருவாய் ரூ. 50,931.98 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.44,484.60 கோடியைவிட இது 14.49 விழுக்காடு கூடுதலாகும்.
இதே காலகட்டத்தில், சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.34,393.78 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.29,733.82 கோடி மட்டுமே. சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15.67 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.14,440.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.12,869.41 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டைவிட 12.21 விழுக்காடு அதிகமாகும்.
ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில், 4,717.37 மில்லியன் பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 6.47 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்தகவலை மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சார்க் உணவு வங்கிக்கு 1.5 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்குகிறது இந்தியா
சார்க் உணவு வங்கிக்கு, இந்தியாவின் சார்பில் 1,53,200 டன் உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்காக 2,43,300 டன் உணவு தானியங்கள் கையிருப்புடன் இந்த உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. சார்க் உணவு வங்கி இந்த ஆண்டு அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெற்ற உணவு வங்கி தொடர்பான முதல் கூட்டத்தை அடுத்து செயல்படத் துவங்கியது.
இந்த உணவு வங்கிக்கு ஆப்கானிஸ்தான்- 1,420 டன், பங்களாதேஷ் 40,000 டன், பூட்டான் 150 டன், மாலத்தீவுகள் 200 டன், நேபாளம் 4,000 டன், பாகிஸ்தான் 40,000 டன், இலங்கை 4,000 டன் உணவு தானியங்களை அளிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்
என்.டி.சி. ஆலைகளை சீரமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
நாட்டில் உள்ள என்.டி.சி. ஆலைகளை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழில் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியமும், அமைச்சரவைக் குழுவும் அளித்த பரிந்துரையின் பேரில் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்த, அதன் கீழ் செயல்படும் 9 கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் இருக்கும், லாபம் அளிக்காத 67 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விருப்ப ஓய்வில் செல்லவிரும்பும், மூடப்பட்ட ஆலைகளின் உபரி பணியாளர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தினால், என்.டி.சி. பணியாளர்களின் எண்ணிக்கை 12,234 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தால் 59,179 ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
22 ஆலைகளை நவீனப்படுத்த என்.டி.சி. திட்டமிட்டுள்ளது. இதில் 15 ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. 16 ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டம் கூட்டு முயற்சி முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
விமான பயணக்கட்டணம் குறைப்பு இல்லை – கிங்ஃபிஷர்
விமான பயணத்திற்கான கட்டணக்குறைப்பு தற்போது இல்லை என்று கிங்ஃபிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரபு படேல் விடுத்த வேண்டுகோளை அந்நிறுவனம் நிராகரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து 7 வது முறையாக விமான எரிபொருளுக்கான விலையை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. இதன் அடிப்படையில் விமான நிறுவனங்களின் பயணிகளின் கட்டணத்தை குறைத்தும் அறிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் நேரடி விலை குறைப்பில் ஈடுபடாமல் எரிபொருளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் சிறிது விலையை குறைப்பதாக அறிவித்தது. கிங்ஃபிஷர் நிறுவனம் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. மத்திய அமைச்சர் பிரபு படேல் கிங்ஃபிஷர் உடனியாக விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்தார். உடனே அந்நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி இதுபற்றி முடிவு செய்யபடும் என்று தெரிவித்தது. ஆனால் இன்னும் இதுபற்றிய பேச்சையே அந்த நிறுவனம் எடுக்கவில்லை. இதற்கிடையில் கிங்ஃபிஷரின் செய்தித்தொடர்பாளர் “விமான எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாத போது எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை இப்பொழுது தான் சிறிதளவு போக்கி வருகிறோம். பல எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக கடன் பாக்கி இன்னும் இருக்கிறது. எரி பொருளுக்கான விலை மேலும் குறையும் பட்சத்தில் இது பற்றி கலந்து ஆலோசிக்க உள்ளோம். இதனால் தற்போதைக்கு விமான பயணக்கட்டணம் குறைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்றார். மற்ற விமான நிறுவனங்கள் அறிவித்திருந்த எரிபொருள் கட்டண குறைப்பு மூலமாக பயணச்சீட்டின் விலையில் 9% வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Entry filed under: வணிகம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed