23.12.08 கட்டுரை:உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை?
December 23, 2008 at 3:29 AM Leave a comment
வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழிப்பது.
தற்போது மழை காலம். இரவு நேரங்களில் பெரியவர்களே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எரிச்சலுடன் எழுந்து செல்ல வேண்டியதாகிறது. குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்?
மழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நேரங்களில் கூட உறங்கிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக 3 அல்லது மூன்றரை வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக அதை கவனிக்க வேண்டும்.
10 வயது வரை கூட சில குழந்தைகள் படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும்.
என்ன காரணம்?
உறங்கிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு உடல் நலக்கோளாறு அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.
உடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மன ரீதியான காரணங்கள்.
தீர்வு என்ன?
படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை பெற்றோர் சிலர் கடுமையாகத் திட்டுகின்றனர். இதனை குழந்தைகள் அவமானமாகக் கருத்தலாம். சிறுநீர் கழிப்பை இது மேலும் அதிகமாக்கு. இதனால் எந்த பலனும் இல்லை.
திட்டுவதற்கு பதில் குழந்தையிடம் சிறுநீர் கழிப்பதை நிறுத்தும்படியும், சிறுநீர் வரும்போது தன்னை தயங்காமல் அழைக்கும்படியும் பக்குவமாகப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
தினமும் சிறுநீர் கழித்து விட்டு படுக்கச் செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தூங்கிய ஒரு மணி நேரம் அல்லது 10, 11 மணி வாக்கில் குழந்தையை எழுப்பி மீண்டும் சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது. இதை ஒரு வழக்கமாக சிறிது காலம் செய்து வந்தால் படுக்கயில் சிறுநீர் போகும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடும்.
குழந்தைக்கு மன ரீதியாக என்ன பிரச்சனை என்று பெற்றோர்கள், அன்பாக விசாரித்து அனுசரணையாக அதை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
Entry filed under: கட்டுரைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed