22.12.08 மாலைச்செய்திகள்
December 22, 2008 at 11:02 AM Leave a comment
நிப்டியில் நேரமாற்றம்
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக நேரம் மாற இருக்கிறது. இதற்கான வேண்டுகோளை தேசிய பங்குச்சந்தை செபிக்கு அனுப்பி வைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை காலை 8 மணிமுதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காலை 9.55 க்கு வர்த்தகம் தொடங்கி மாலை 3.45க்கு முடிவடைகிறது. இன்னும் சில வாரங்களில் தேசிய வர்த்தகம் காலை 8 மணிக்கு தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. செபி அமைப்பு இதற்கான ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
இன்சூரன்ஸ் நிபந்தனையை தமிழில் கேட்டு வழக்கு
இன்சூரன்ஸ் பாலிசி விண்ணப்பத்தில் தமிழில் நிபந்தைகளை தரக்கோரிய வழக்கில், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகேயுள்ள கீழாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார். உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது “அடையாற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் வாங்கினேன். அதற்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2009 வரை இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தேன். கடந்த மே மாதம் 15ம் தேதி நான் மோட்டார் சைக்கிளில் வரும்போது மாடு மீது மோதி விபத்து ஏற்பட்டது. எனக்கு சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவானது. இதற்காக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி விண்ணப்பித்தேன். ஆனால் ஏஜெண்டிடம் எடுத்த பாலிசிக்கு விபத்து இழப்பீடு வழங்க முடியாது என்று பதில் வந்தது. பாலிசி நிபந்தனைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருப்பதால் முழுவதும் புரியவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசிக்கான விண்ணப்பத்தில் உள்ள நிபந்தனைகளை தமிழிலும் தருமாறு சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை மறுத்து கடிதம் எழுதியுள்ளனர். மோட்டார் சட்டம் பிரிவு 146ல் பாலிசிதாரருக்கு புரியும் வகையில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளை தமிழில் தருமாறு உத்தரவிட வேண்டும்.”
இந்த மனு நீதிபதி சுகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த வழக்கில் 8 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பிர்லா டயர்ஸ் உற்பத்தியை நிறுத்தியது
டயர்களுக்கான தேவை குறைந்ததை அடுத்து பிர்லா டயர்ஸ் நிறுவனம் தனது புவனேஸ்வர் தொழிற்சாலையை 20 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் தொழிற்சாலையை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக நிர்வாக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் மற்றும் சம்பள குறைப்பு போன்றவை நிகழாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிர்லா டயர்ஸ் தொழிற்சாலையில் 2200 ஊழியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். பிர்லா டயர்ஸ் 43 நாடுகளுக்கு டயர்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 அதிகரித்தது.
இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170 அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 845.00/845.50 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 842.00/843.50).
பார் வெள்ளியின் விலை 11.04/11.05 டாலராக உயர்ந்தது. ( வெள்ளிக் கிழமை விலை 11.00/11.01).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,970
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,910
பார் வெள்ளி கிலோ ரூ.17,740.
காப்பீடு திருத்த மசோதா அறிமுகம்
புது டெல்லி: மாநிலங்களவையில் இன்று பலத்த அமளிக்கு இடையே காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவை இன்று காலை இரண்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணியளவில் மாநிலங்களவை கூடியதும், அவைக்கு தலைமை வகித்த துணை தலைவர் ரஹ்மான் கான், நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சாலை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய மசோதைவை தாக்கல் செய்யும் படி அழைத்தார்.
அமைச்சர் பி.கே.பன்சால் மசோதாவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அமையின் மைய பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். சிலர் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தனர்.
அதே நேரத்தில் அமைச்சர் பன்சால் மசோதைவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமைச்சரிடம் இருந்து, மசோதாவை பிடுங்க முயற்சித்தார்.
அயல் உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களை தள்ளிவிட்டார். மற்றொரு அமைச்சரான மீரா குமார் முன்வரிசைக்கு சென்று அமைச்சருக்கு முன் நின்று கொண்டு அவர் மீது தாக்குல் நடக்காதபடி காப்பாற்றினார்.
இதனிடையே அமைச்சர் பன்சால் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்த வகை செய்கிறது.
மாநிலங்களவையில் காப்பீடு திருத்த மசோவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக, துணைத் தலைவர் ரஹ்மான் கான் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, காப்பீடு திருத்த மசோதைவை முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. மத்திய அரசுக்கு அரசின் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. இடதுசாரி கட்சிகள் ஜீலை மாதம் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
Entry filed under: வணிகம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed