18.12.2008:மாலைத்துளிகள்
December 18, 2008 at 10:23 AM Leave a comment
மும்பை தாஜ் ஹோட்டலை பாதுகாக்க தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் ஏற்பாடு
மும்பை : மும்பை தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டலை பாதுகாப்பது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் பரிசீலித்து வருகிறது. 17 ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கட்டிடத்தை இப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்தான் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் தொல்பொருள் ஆராய்ச்சி கழகமும் தேவையான ஆள்பலத்தை கொடுக்க முன்வந்திருக்கிறது. அதற்கு எவ்வளவு ஆள்பலம் தேவை என்பது குறித்து இப்போது நாங்கள் சர்வே செய்து வருகிறோம் என்று அதன் இயக்குனர் அன்சூ வைஸ் தெரிவித்தார். சர்வே முடிந்ததும் கூடுதலாக எவ்வளவு ஆள்பலம் தேவை என்பது தெரிய வரும். அதன்பின் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். இனிமேலும் அங்கு தீவிரவாத தாக்குதல் ஏதும் நடக்க முடியாதபடி அது பாதுகாக்கப்படும் என்றார் அன்சூ வைஸ். இருந்தாலும் இவையெல்லாம் மத்திய உள்துறையின் ஒப்புதலின்பேரில்தான் நடக்கும் என்றார் அவர்.
பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்தது
புதுடில்லி : டிசம்பர் 6ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், இதற்கு முந்தைய வாரத்தில் 8 சதவீதமாக இருந்தது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த கணிப்பில் கூட பணவீக்கம் 7.49 சதவீதமாக இருக்கும் என்றுதான் சொல்லியிருந்தது. இப்போது அதைவிடவும் குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்தது.
சேன்யோவின் பங்குகளை றபானாசோனிக்கிற்கு விற்க கோல்ட்மேன் சாக்ஸ் முடிவு
டோக்கியோ : பிரபல ஜப்பான் எலக்டக்ரானிக் நிறுவனமான சேன்யோவில் கோல்ட்மேல் சாக்ஸ் நிதி வங்கிக்கு இருக்கும் பங்குகளை, இன்னொரு பிரபல நிறுவனமான பானாசோனிக் வாங்கிக்கொள்வதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் ஒத்துக்கொண்டிருக்கிறது. 6.5 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்ள முன்வந்த இந்த ஒப்பந்தத்திற்கு இப்போது தடை எதுவும் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்ட விலையை விட இப்போது பங்கு ஒன்றுக்கு கூடுதலாக ஒரு யென் கொடுக்கவும் பானாசோனிக் ஒத்துக்கொண்டிருக்கிறது, இதன்படி, பங்கு ஒன்றிற்கு 131 யென்னை பானாசோனிக் கொடுக்கும். மொபைல் போன், கம்ப்யூட்டர், மியூசிக் பிளேயர் போன்றவைகளில் பயன்படுத்தும் ரீசார்ஜபிள் பேட்டரி தயாரிப்பில் சேன்யோ முன்னணியில் இருக்கிறது. எனவே அந்த கம்பெனியை வாங்கி விட வேண்டும் என்று ரொம்ப நாளாகவே பானாசோனிக்கிற்கு ஆசை இருக்கிறது. முதலில் சேன்யோவின் பங்குகளை வைத்திருக்கும் மூன்று முக்கிய முதலீட்டாளர்களிடம் பங்கு ஒன்றுக்கு 120 யென் கொடுக்க முன்வந்தது. பின்னர் பங்கு ஒன்றுக்கு 130 யென் கொடுப்பதாக சொல்லியது. இப்போது அதைவிடவும் ஒரு யென் க;ட்டி 131 யென் கொடுப்பதாக சொல்லியிருக்கிறது. சான்யோவின் முக்கிய மூன்று பங்குதாரர்களில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அதன் பங்குகளை விற்க முன்வந்து விட்டது. இன்னும் இரண்டு முக்கிய பங்குதாரர்களான சுமிடோமோ மிட்சு பேங்கிங் மற்றும் தெய்வா செக்யூரிட்டீஸ் ஆகியவை, அவைகளின் பங்குகளை விற்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களும் அவர்களது பங்குகளை பானாசோனிக்கிற்கு விற்று விட்டால், சேன்யோ நிறுவனமே பானாசோனிக்கிடம் வந்து விடும்.
ஓபக் நாடுகள் உற்பத்தியை குறைத்தாலும் கச்சா எண்ணெய் விலை 39.94 டாலர்தான்
நியுயார்க் : குறைந்து கொண்டே வரும் கச்சா எண்ணெய் விலையை <உயர்த்தும் நடவடிக்கையாக, அதன் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் பேரல்களை குறைப்பது என்று ஓபக் நாடுகள் முடிவு செய்திருந்தபோதும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 40 டாலருக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களுக்குள் ஓபக் அமைப்பு நாடுகள் மெத்தமாக நாள் ஒன்றுக்கு 4.2 மில்லியன் பேரல்கள் உற்பத்தியை குறைத்திருக்கிறது. இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் மந்த நிலையால் அமெரிக்கா போன்ற அதிகம் பெட்ரோலை உபயோகிக்கும் நாடுகளில் பெட்ரோலுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருவதால், அதற்கு தகுந்தபடி கச்சா எண்ணெய் விலையும் குறைந்து கொண்டுதான் வருகிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று 39.94 டாலராகத்தான் இருந்தது. 2004 ஜூலைக்குப்பின் நேற்றுதான் கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்ததற்கு காரணம், கடந்த நான்கு வாரங்களில் மட்டும் அமெரிக்காவின் பெட்ரோல் டிமாண்ட், கடந்த வருடத்தை விட 2.7 சதவீதம் குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்துதான் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக ஓபக் சொல்லியிருந்தாலும், அதன் 12 உறுப்பு நாடுகளில் எத்தனை நாடுகள் சொன்னபடி உற்பத்தியை குறைக்கப்போகிறது என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் 100 சதவீத வளர்ச்சியை கண்ட ஜெர்மன் பி.எம்.டபிள்யூ., கார்
கொச்சி : சொகுசு கார்களை தயாரிக்கும் ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ.,வின் இந்திய நிறுவனம், இந்த வருடத்தில் 100 சதவீத விற்பனை வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் உயர் அதிகாரி ஒருவர் இதனை நேற்று தெரிவித்தார். நவம்பர் மாதத்திற்குள்ளாகவே நாங்கள் இங்கு 2,703 கார்களை விற்பனை செய்திருக்கிறோம். இன்னும் இந்த வருட முடிவிற்குள் 2,800 கார்களை விற்று விடுவோம் என்றார் பி.எம்.டபிள்யூ.,வின் தலைவர் பீட்டர் க்ரோன்ஞ்நபி. ஆனால் இந்த வருடத்தில் நாங்கள் அடைந்த வளர்ச்சியை அடுத்த வருடத்தில் அடைய முடியாது. ஏனென்றால் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்வதேச நிதி நெருக்கடி அப்போது எங்களை பாதிக்கும் என்றார் அவர். விற்பனையை அதிகரிக்க நாங்கள் இரண்டாம் கட்ட நகரங்களான லூதியானா, புவனேஷ்வர், ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் 2009ல் ஷோரூம்களை திறக்க இருக்கிறோம் என்றார். கொச்சியில் இவர்களது ஷோரூம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இப்போதைக்கு இந்தியாவில் அவர்களுக்கு 11 ஷோரூம்கள் இருக்கின்றன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உங்களை பாதிக்கவில்லையா என்று கேட்டதற்கு, மற்ற நாடுகளில் பாதிப்பு இருக்கிறது; இந்தியாவில் அவ்வளவாக பாதிப்பு இல்லை என்றார்.
தேசப் பொருளாதாரம் பாதுகாப்பாக உள்ளது – ரிசர்வ் வங்கி
டெல்லி: இந்த மோசமான பொருளாதாரச் சூழலிலும் இந்தியா தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது நாட்டின் தலைமை வங்கி.
இன்றைக்கு நாட்டில் கடன் தேவை அதிகரித்து வருகிறது. இந்தக் கடன் தேவையின் தன்மையைக் கவனித்து அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது வங்கிகளின் வேலைதான்.
வங்கிகள் எப்போதுமே தொலைநோக்குப் பார்வையுடன், பேரியல் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இன்றைய சூழலில் இந்திய நிதிச் சந்தை பாதுகாப்பாகவே உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரம் அத்தனை சுலபத்தில் வீழ்ந்துவிட முடியாத அளவு பாதுகாக்கப்பட்டுள்ளது, என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி: சிக்கனத்துக்கு மாறும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம்
லண்டன்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும், நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. மீதமாகும் சாப்பாட்டைக் கூட வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என சமையல்காரர்களுக்கு ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளாராம்.
உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம்.
கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம். மேலும், தனது பேரன்கள் வில்லியம், ஹாரி ஆகியோரிடம், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக கொண்டாடுமாறும் உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும் கிறிஸ்துமஸுக்காக வாங்கவுள்ள பட்டாசுகளுக்கும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளாராம் ராணி.
அதிக பணத்தை பட்டாசுகளுக்காக செலவழிக்கக் கூடாது என்பது அரச குடும்பத்தினருக்கு அவர் போட்டுள்ள உத்தரவு.
அரச குடும்பத்தினரின் கொண்டாட்டங்களுக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தயாரித்து கொடுக்கும் நிறுவனமான டாம் ஸ்மித்திடம், விலை மலிவான பட்டாசுகளைத் தயாரித்துக் கொடுக்குமாறு அரண்மனையிலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.
இங்கிலாந்தும், பிற உலக நாடுகளும் பொருளாதார சிக்கலில் இருக்கும்போது அரச குடும்பத்தினர் மட்டும் ஆடம்பரமாக இருப்பதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று கருதுகிறாராம் ராணி. அதனால்தான் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவுகள்.
இதுதவிர அரச குடும்பத்தினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில், 50 பவுன்டுக்கு மேல் கிப்ட் பொருட்களை வாங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார் ராணி எலிசபெத்.
கிப்ட் பொருட்களை வைத்துக் கொடுக்கும் அட்டைப் பெட்டிகளை அப்படியே தூக்கி எறியாமல் தேவைப்படுபவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
ராணியின் இந்த உத்தரவுகள் இங்கிலாந்து மக்களிடையே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. ராணி இப்படி உத்தரவு போட்டாலும், அரச குடும்பத்தினரின் இளைய வாரிசுகள் இன்னும் ஆடம்பரமாகத்தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பார்ட்டிகளில் தடபுடலான ஏற்பாடுளை களை கட்டுகின்றன என்று சிலர் முனுமுனுக்கின்றனர்.
82 வயதாகும் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு 475 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸுக்காக ராணியின் நார்போல்க் எஸ்டேட் அரண்மனையில் அரச குடும்பத்தினர் கூடி கொண்டாடவுள்ளனர்.
வட்டி குறைப்பு ஏமாற்றம் அளிக்கிறது
கோவை: சிறு, குறுந் தொழில்களுக்கு வங்கிகள் அறிவித்துள்ள வட்டி குறைப்பு ஏமாற்றத்தை தருவதாக இந்திய தொழில் வர்த்தக சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் மகேந்திர ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் துறை வங்கிகள், குறுந்தொழில்களுக்கு 1 விழுக்காடும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு அரை விழுக்காடு வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கும் வட்டி, குறைந்தபட்ச கையிருப்பு போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை அளித்தது. இது நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுபடுத்துவதற்கும், வங்கிக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதற்கும் அறிகுறிகளாக இருந்தன.
இருப்பினும் தற்போது கடன்களுக்கான வட்டி எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கவில்லை. தொழில், வியாபாரத்துக்கு கடன் கொடுப்பதைத் தவிர்த்து, பொதுத் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வசம் நாளொன்றுக்கு ரூ.38 ஆயிரம் கோடியை ஒப்படைக்கின்றன.
அரசு சலுகைகளை அறிவித்தாலும், வங்கிகளின் மாறுதலை விரும்பாத அணுகுமுறையால் தொழில் துறைக்கு எந்த பலனும் கிடையாது. உயர் வட்டி, கடனைத் திரும்பச் செலுத்தும் தொகை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஜவுளி, ரியல் எஸ்டேட், கட்டுமானம், சில்லரை விற்பனை துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை குறைந்தபட்சம் 3 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
கடன் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை மாற்றியமைப்பது, கடன் மற்றும் மூலப் பொருள்களுக்கான தொகைகளை தொழில் வளர்ச்சிக்காக அளிப்பது உள்ளிட்ட இந்திய வங்கி குழுமம் தெரிவித்துள்ள அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. இதை அனைத்து பொதுத் துறை வங்கிகளும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
2 டிரில்லியன் டன்கள் பனி உருகியுள்ளது!
2003ஆம் ஆண்டு முதல் தென் துருவப் பகுதியான அண்டார்டிகா, வட துருவத்திலுள்ள கிரீன்லேண்ட், அலாஸ்கா ஆகியவற்றின் நிலப்பகுதியில் உள்ள 2 டிரில்லியன் (1 டிரில்லியன் = 1,000 பில்லியன்; 1 பில்லியன் = 100 கோடி) டன் பனி உருகியுள்ளதாக நாசாவின் விண்வெளி செயற்கைக்கோள் விவரம் தெரிவிக்கிறது.
நாசாவின் கிரேஸ் செயற்கைக்கோள், பனி எடையைக் கொண்டு இந்த கணக்கிடுதல்களை செய்துள்ளது. கிரீன்லேண்ட் நிலப்பகுதியில் உள்ள பனி கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் உருகியுள்ளதாக இந்த விவரம் தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அலாஸ்காவில் நடப்பு ஆண்டில் பனி உருகுதல் அதிகம் இல்லையெனினும் 2003ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் கணக்கீட்டின் படி நிலப்பகுதி பனி சுமார் 400 பில்லியன் டன்கள் உருகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிலப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய அளவிலான பனி உருகுதலால் கடந்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 1/5 அங்குலம் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடல்பகுதி பனி உருகுதலும் அதிகரித்து வருகிறது, இந்த நிலவரத்தில் எந்தவித முன்னெற்றமும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி உருகுதலால் கோடைக்காலங்களில் கடல் நீர் அதிக வெப்பத்தை உறிஞ்சும், ஏனெனில் வெப்பத்தை வாங்கி மீண்டும் வெளியேற்ற வெண்பனி அங்கு இல்லை என்பதே. இதனால் கோடைக் காலங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
கொலராடோவில் உள்ள பனி அளவு ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜூலியன் ஸ்ட்ரோவ் இது பற்றி கூறுகையில், “பனி உருகுதலின் வேகம் ஆய்வாளர்களின் அனுமாணத்தையும் தாண்டியதாக உள்ளது” என்கிறார்.
சைபீரியாவின் கடல் பகுதியை ஆய்வு செய்து வரும் மற்றொரு விஞ்ஞானி அகோர் செமிலிடோவ் கிழக்கு சைபீரைய கடல், லாப்டேவ் கடல் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மீத்தேன் வெப்ப வாயுப் படிவுகள் கடல் மேல் மட்டத்திற்கு வருவதாகக் கூறுகிறார். இதனாலும் புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார் அவர்.
Entry filed under: வணிகம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed